விமர்சனம்

சவரக்கத்தி விமர்சனம்

விதவிதமான பிளேடுகள் வந்துவிட்டாலும் இன்னும் பாட்டன் முப்பாட்டன் காலத்திய சவரக்கத்தியை வத்து முகம் ம்ழிக்கும் வேலை செய்கிற முடிதிருத்துநர் ஒருவருக்கும், விதவிதமாக மனிதர்களைத் துன்புறுத்தி பணம் சம்பாதிக்கிற ஒரு மெண்ட்டல் தாதாவுக்கும் போகிற போகில் நடக்கும் சின்ன உரசலை ஒரு முழுநீளப் படமாக்கியிருப்பது மட்டுமல்ல சுவாரசியமான படமாகவும் ஆக்கியிருக்கிறார்கள்.

திரைக்கதை எழுதிய மிஷ்கினும் அதை அழகாகப் படமாக்கியுள்ள இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவும் பாராட்டுக்குரியவர்கள். படத்தில் வருகிற எல்லோரையும் பொருத்தமாக இணைத்து பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கது.

பிச்சை என்கிற பெயருடன் முடிதிருத்துநர் வேடத்தில் நடித்திருக்கும் இயக்குநர் ராம், திரைத்துறைக்கு வருமுன்பு ஊரில் முடிவெட்டும் வேலை செய்தாரோ என்று சந்தேகிக்கும் அளவு நேர்த்தியாக நடித்திருக்கிறார்.

இருசக்கர வாகனம் நிறைய குடும்பத்தை வைத்துக்கொண்டு சாலையில் அவர் விடும் உதார்கள் அதகளம். யாரைக் கண்டும் அசராமல் அவர் அடித்துவிடும் பொய்களைக் கேட்டு நம் வயிறு புண்ணாகிறது. மனைவி குழந்தைகளைப் பாதுகாக்க அவர் கஷ்டப்படுகிற நேரத்தில் கலங்க வைக்கிறார். குழந்தைகள் முன்பு எதிரிகளோடு சண்டை போட முடியாத கையாலாகா நிலையில் அவர் துவளும்போது நாமும் துவள்கிறோம்.

மிகப்பெரிய மும்பையை ஆட்டிப்படைக்கும் நிழலுலக தாதா போலத் தோற்றமளிக்கும் மிஷ்கினுக்கு உள்ளூர் தாதா வேடம். பார்வையாலேயே பாதி நடித்துவிடுகிறார்.அவரிடம் சிக்கிக் கொண்டு அவர் குழுவினர் படும் பாடுகள் நமக்கு ஜாலி. அவ்வப்போது அவரும் அவருடைய குழுவினரும் கோபத்தைக் காட்டுவதற்காக கத்துவதைக் குறைத்துக்கொண்டிருக்கலாம்.

ஷாஜி ஓரிரு காட்சிகளில் வந்தாலும் அவர் பேசும் விசயங்கள் வசனகர்த்தாவின் ஆளுமையை வெளிப்படுத்துகிறது.

இரண்டு குழந்தைகளை கூடவே அழைத்துக்கொண்டு நிறைமாதக் கர்ப்பிணியாகவும் வருகிற பூர்ணா நடிப்பு, நடிப்பே அல்ல நிஜம். வெள்ளந்தியாக அவர் பேசும் காட்சிகளில் அவருக்குத் திருஷ்டி சுற்றிப் போடலாம்.

கார்த்திக்கின் ஒளிப்பதிவில் அவ்வளவு எதார்த்தம்.

அரோல்கரோலி இசையில் இரண்டாம்பாதியின் கடைசியில் அண்ணாந்து பார் என்று மதுஅய்யர் பாடத்தொடங்கும் போதுதான் அடடா படத்தில் இதுவரை பாடலே வரவில்லையே என்ற எண்ணம் வருகிறது.

நீ ஓடு நான் துரத்துறேன் என்று ராமிடம் சொல்வார் மிஷ்கின், படம் பார்க்கிறவர்களும் ஒரு அமானுஷ்யம் போல் ராமின் பின்னாலேயே ஓடுவார்கள்.

மிக எளிய மனிதர்களை வைத்து மிக வலிய உணர்வுகளை உருவாக்கியுள்ள இயக்குநர் கவனத்துக்குரியவர்.

Related Posts