இருட்டு அறையில் முரட்டுக்குத்து என்று பெயர் வைத்தது ஏன்?
ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளுள் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் சாரா, இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தின் இயக்குநர் சந்தோஷ் P. ஜெயக்குமார் பேசுகையில்,‘ நான் இயக்கும் இரண்டாவது படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து ’. அடல்ட் ஹாரர் காமெடி படம். இவர் ஏன் இது போன்ற படங்களை எடுக்கிறார்?, கருத்து சொல்லும் படங்களை எடுக்காமல் ஏன் இப்படியான படங்களை எடுத்து திரைத்துறையை சீரழிக்கிறீர்கள் என உங்களுக்குள் ஏராளமான கேள்விகள் இருக்கும். ஆனால் இது ஒரு ஜேனர். உலக சினிமாவில் எல்லா இடத்திலும் இருக்கிறது. தமிழில் இல்லை. இந்த படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக பார்த்தால் பொழுது போக்கு படமாக மட்டுமேத் தெரியும். அப்படித்தான் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நான் பணியாற்றும் இரண்டாவது படம். இந்த படத்திற்காக நான் என்ன கதை அவரிடம் சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் என்ன கதை கேட்டார் என்று எனக்கு தெரியவில்லை. படபிடிப்பு தளத்திற்கு சென்று தான் கதையை விவாதித்து காட்சிகளையும், வசனங்களையும் எழுதினோம். இந்த படத்தில் வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி என மூன்று நாயகிகள் இருக்கிறார்கள். இதில் நடிகை சந்திரிகா ரவி பேயாக நடித்திருக்கிறார். அவர் படபிடிப்பின் போது இருபதடி உயரத்தில் கயிறு கட்டி தொங்கியப்படி நடித்துக் கொடுத்தார். அவருக்கு மேக்கப் போட ஒன்றரை மணி நேரம் ஆகும். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டு நல்ல ஒத்துழைப்புக் கொடுத்தார். தயாரிப்பாளர் என்னிடம் கதை கேட்கவில்லை. நான் சொன்ன பட்ஜெட்டிற்கு ஒப்புக்கொண்டு, எந்த வித தலையீடும் இல்லாமல், முழு சுதந்திரம் கொடுத்தார். அதனால் தான் இருபத்தி மூன்று நாட்களுள் படபிடிப்பை நடத்தி முடித்தோம்.’ என்றார்.
இந்தப் படத்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்தது எதனால்? என்ற கேள்விக்கு அவர் அளித்த விளக்கம்…..
பேய்களுக்கு இருட்டு மிகவும் பிடிக்கும். இருட்டு அறைக்குள் பேயிடம் மாட்டினால் மரண அடி கிடைக்கும், படத்தில் அப்படி மாட்டிக் கொண்டு அடி வாங்குகிறார்கள் என்பதால் இப்படி ஒரு பெயர் வைத்தோம் என்கிறார்.











