சினிமா செய்திகள்

வெற்றிமாறன் சொன்ன பதில் தயாரிப்பாளர் அதிர்ச்சி – விடுதலை பட சோகம்

வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி, சூரி, கிஷோர் மற்றும் பவானிஸ்ரீ உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் விடுதலை.இப்படத்துக்கு இசை இளையராஜா.

ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் தொடங்கி இரண்டாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.

அதிகபட்சம் அறுபது நாட்கள் படப்பிடிப்பு உடனே வெளியீடு என்று பேசித் தொடங்கப்பட்ட இப்படம் இன்னும் முடியவில்லை.

முதலில் கதாநாயகன் என்று சொல்லப்பட்ட சூரியின் பகுதிகள் குறைந்து விஜய்சேதுபதியின் பகுதிகள் அதிகமாக இருக்குபடி கதை மாற்றப்பட்டது உட்பட பல காரணங்களால் படப்பிடிப்பு நீண்டுகொண்டே போகிறது.

இதனால் தயாரிப்புத் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. அதன் காரணமாக, இந்தப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துத் தருகிறேன் என்று உறுதியளித்தாராம் வெற்றிமாறன்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே அதை வெளியிட்டார்கள்.

அதோடு இப்படத்தைத் தமிழகமெங்கும் உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்போது,2023 சனவரி 26 அன்று விடுதலை படத்தை வெளியிடலாம் என்று ரெட்ஜெயண்ட் நிறுவனம் சொல்லியிருக்கிறது.

அதனால் ஆர் எஸ் இன்போடெயிட்மெண்ட் நிறுவனத்தினர் வெற்றிமாறனிடம் போய்,இன்னும் எவ்வளவு நாள் படப்பிடிப்பு நடத்த வேண்டுமோ நடத்திக் கொள்ளுங்கள் ஆனால் அதற்குமுன் முதல்பாகத்தை முடித்துக் கொடுத்துவிடுங்கள், சனவரி 26 இல் படத்தை வெளியிடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதற்கு வெற்றிமாறன், இப்போது நடக்கும் படப்பிடிப்பே முதல்பாகத்துக்கானதுதான். இதை முழுமையாக முடித்தால்தான் முதல்பாகத்தை இறுதி செய்யமுடியும் என்று சொல்லிவிட்டாராம்.

அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளருக்கு மயக்கம் வராத குறை.

எங்கே செல்லும் இந்தப்பாதை?

Related Posts