சினிமா செய்திகள்

விஜய் படத்துக்காக லோகேஷ்கனகராஜ் கொடுத்துள்ள பெரும்தொகை – ஆச்சரிய தகவல்

தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தை லோகேஷ்கனகராஜ் இயக்குகிறார் என்பதும் அப்படத்தை செவன்ஸ்கிரின் ஸ்டுடியோ லலித்குமார் தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகியுள்ளது.

இந்தப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும் வில்லன்களாக இந்தி நடிகர் சஞ்சய்தத், மலையாள நடிகர் பிருத்விராஜ் மற்றும் இயக்குநர் கெளதம்மேனன் அல்லது இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தப்படம் ஆங்கிலத்தில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் தமிழாக்கம்தான் என்று செய்திகள் வந்தன.

இதுகுறித்து விசாரித்தால், அது உண்மைதான் என்கிறார்கள்.

அந்தப்படத்தைத் தமிழில் எடுக்க வேண்டும் என்பதற்காக அப்பட நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு அந்தப்படத்தை இந்திய மொழிகளில் மொழிமாற்று செய்யும் உரிமையைப் பெற்றிருக்கிறாராம் இயக்குநர் லோகேஷ்கனகராஜ்.

அதற்காக அவர் கொடுத்த விலை இரண்டு கோடியே எழுபது இலட்சம் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தொகை லோகேஷ்கனகராஜின் சொந்தப்பணம் என்றும் சொல்கிறார்கள். ஏனெனில் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குவது என்று தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் போட்டுக்கொள்வதால் கதை சம்பந்தப்பட்ட செலவை நாமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற முடிவில் இவ்வளவு தொகை கொடுத்து அதன் உரிமையை வாங்கி வைத்திருக்கிறாராம்.

அப்படத்தை அப்படியே தமிழில் எடுக்கப்போவதில்லை தமிழுக்காக நிறைய மாற்றங்களைச் செய்யவிருக்கிறார்கள். ஆனாலும் அப்பட நிறுவனத்திடமிருந்து இவ்வளவு பெரும்தொகை கொடுத்து அதிகாரப்பூர்வமாக உரிமை பெற என்ன காரணம்?

விஜய்யின் படங்கள் இப்போது உலக அளவிலும் பெரிய அளவில் வியாபாரம் செய்யப்படுகிறது. அதனால் உலகெங்கும் நிறைய திரையரங்குகளில் படம் வெளியாகும். அப்போது தமிழ்மக்களைத் தாண்டி பிற மொழியாளர்களும் விஜய் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

அப்படிப் பார்க்கும் நேரத்தில் இது ஆங்கிலப்படத்தின் தழுவல் என்கிற விசயம் வெளியாவது பலவீனமாக இருக்கும் என்பதாலேயே அப்பட உரிமையை பெரும் தொகை கொடுத்து அதிகாரப்பூர்வமாகப் பெற்றிருக்கிறாராம் லோகேஷ் கனகராஜ்.

அப்பட்டமாகக் காப்பியடித்துவிட்டு அலட்சியமாக நடந்துகொள்வோர் மத்தியில் லோகேஷ்கனகராஜ் செய்துள்ள இச்செயல் மிகவும் ஆரோக்கியமான செயல் என்று விசயமறிந்தோர் பாராட்டுகின்றனர்.

Related Posts