விமர்சனம்

சர்கார் – திரைப்பட விமர்சனம்

உலக அளவில் புகழ்பெற்ற கூகுள் தலைமை அதிகாரி சுந்தர்பிச்சையை பிரதியெடுத்த மாதிரி சுந்தர் ராமசாமி என்கிற வேடத்தில் விஜய்.

அமெரிக்காவிலிருந்து இந்தியா வருகிற அவரால் இங்குள்ள பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஆபத்து என்கிற அளவுக்கு நாயகனின் பெருமை பேசி. அறிமுகம் செய்கிறார்கள்.

அவரோ ஓட்டுப்போட வருகிறார். அவருடைய ஓட்டை யாரோ போட்டுவிட, கோபமடையும் அவர் தன் ஓட்டுரிமைக்காகப் போராடுகிறார்.

அதை மட்டும் சொன்னால் தன் தனிப்பட்ட உரிமைக்காகப் போராடுகிறார் என்று சாதாரணமாகப் போய்விடும் என்பதால், கந்துவட்டிக்காக தீக்குளித்த ஒரு குடும்பத்தை துணைக்கு வைத்து பொதுவாக்குகிறார்கள்.

என் ஓட்டை போடவேண்டும் என்று போராட்டம் தொடங்கும் விஜய்யை அரசியல்வாதிகள் உசுப்பேற்றிவிட நாட்டைக் காக்க வேண்டும் என்கிற போராட்டத்தில் இறங்குகிறார்.

உசுப்பேத்தறவங்க கிட்ட விஜய் உம்முனு இருந்திருந்தால் நாம் ஜம்முனு படம் பார்த்திருக்கலாம்.

விஜய்யின் தோற்றம், துள்ளல், கோபம், கொதிப்பு ஆகியன மாறி மாறி படம் முழுக்க திரையில் நிறைகிறது.

அவரும் சளைக்காமல் எல்லாவற்றையும் செய்கிறார். நமக்குத்தான் களைப்பு மிஞ்சுகிறது.

ஓஎம்ஜி பொண்ணு என்கிற பாடலில் நடனமாடுவதால் கீர்த்திசுரேஷ் படத்தின் நாயகி என்று சொல்லலாம். மற்றபடி படம் முழுக்க அவர் வந்துபோகிறார். அவ்வளவுதான்.

பழ.கருப்பய்யா முதலமைச்சராக நடித்திருக்கிறார். துணை முதல்வர் மாதிரி ராதாரவி. பழ.கருப்பய்யாவின் மகள் வேடத்தில் வரலட்சுமி சரத்குமார்.

இவர்களை வைத்துக்கொண்டு சமகால அரசியல் நிகழ்வுகளை விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

மூவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேடத்துக்கேற்ப நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது ஆறுதல்.

யோகிபாபு ஓரிரு காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் குறைவில்லை ஆனால்,

இது தமிழ்ப்படம் என்று பாடலாசிரியரிடம் சொல்ல மறந்துவிட்டார்கள் போலும். ஒரு பாடலில் கூட வரிகள் உருப்படியாக இல்லை.

படம் முழுக்க கூட்டம் கூட்டமாக இருந்தாலும் கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு நேர்த்தியில் காட்சிகள் தப்புகின்றன.

அரசியல் படம் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கேற்ப திரைக்கதை அமைத்திருக்கலாம். மக்களின் பொதுப்புத்தியில் அரசியல்வாதிகள் மீது உள்ள விமர்சனங்களை மட்டும் தொகுத்து வைத்து தன் அரைகுறை அறிவை வெளிப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ்.

49 பி என்கிற சட்டப்பிரிவு அறிமுகம் செய்கிறாரகள். விஜய் அரசியலுக்கு வந்தால் தன் கட்சி வேட்பாளர்களை எப்படித் தேர்வு செய்வார்? என்று விளக்குகிறார்கள். இந்தப் படத்தில் வருவது போலத்தான் அவருடைய அரசியல் இருக்கும் என்றால் அவர் நடித்துக்கொண்டிருப்பதே நாட்டுக்கு நல்லது.

படத்தில் அவர் அறிமுகம் ஆகும் காட்சி உட்பட படம் முழுக்க ஸ்டைலாக புகைபிடிக்கிறார். 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லிவிட்டு எந்நேரமும் கணினி முன்பே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

முருகதாஸ் மற்றும் விஜய்யின் அரசியல் அரை வேக்காட்டுத் தனத்தைப் படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

தன்னுடைய அரசியல் எண்ணத்தை மக்களிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் வலுக்கட்டாயமாகத் தணிக்கிறார்கள். தாங்க முடிவில்லை.

தலைவர் முகம் என்பது பிராண்ட் என்று ராதாரவி சொல்ல பிராண்டை ஒழிப்பதில் நான் வல்லவன் என்று விஜய் சொல்கிறார். அதற்குள் இருக்கும் நுட்பமான அரசியல் முருகதாஸ் மற்றும் விஜய்க்கு தெரியுமா? அது என்ன? அதற்கு மாற்றாக அவர்கள் வைத்திருக்கும் விசயம் அற்புதமா? அபத்தமா?

இந்தக் கேள்விகளை உண்மையாக கதையை எழுதிவர்களிடம் தான் கேட்கவேண்டும்.

Related Posts