விமர்சனம்

ரைட்டர் – திரைப்பட விமர்சனம்

காவல்நிலையங்களில் உள்ள ரைட்டர் எனப்படும் எழுத்தரைக் கதைநாயகனாக்கி,  காவல்துறையில் உள்ள சாதிச்சிக்கல் பற்றிப் பேசியிருக்கும் படம் ரைட்டர். கூடவே, காவலர்களுக்குச் சங்கம் வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.

மீசையின்றி,சிறு தொப்பையுடன் படம் நெடுக வரும் சமுத்திரக்கனி,தன் நடிப்புத் திறமையால் காவல்துறையில் ஒடுக்கப்படுவர்களின் பிரதிநிதியாக உருவெடுத்திருக்கிறார். காவல் ஆய்வாளர்களிடம் அவர் படுகின்ற அவமானங்கள் கடைநிலைக் காவலர்கள் மேல் பரிதாபத்தை ஏற்படுத்துகின்றன.

காவல்துறையிடம் மாட்டிக் கொள்ளும் அப்பாவி இளைஞனாக வரும் ஹரிகிருஷ்ணன் பொருத்தமாக நடித்துப் பலம் சேர்த்திருக்கிறார்.

அவருடைய அண்ணனாக நடித்திருக்கும் இயக்குநர் சுப்பிரமணியசிவா, பாத்திரமாகவே மாறியிருக்கிறார். எம் புள்ள எம்புள்ள என்று அவர் கதறும் போது நம்மையும் கலங்கவைக்கிறார்.

காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் கவிதாபாரதி, உயரதிகாரிக்குக் கட்டுப்பட்டுத் தலைகுனிந்து நிற்கும்போதும் சமுத்திரக்கனியை உயரதிகாரி பாராட்டும்போது கடுப்பாகப் பார்க்கும்போதும் நிஜ காவல் அதிகாரியோ என எண்ணவைத்திருக்கிறார்.

வழக்குரைஞராக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர், எளிய மக்களுக்கு இன்னும் மிச்சமிருக்கும் நம்பிக்கையின் உருவமாக மிளிர்கிறார்.காவல்நிலையத்தில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அழுத்தமாகப் பேசும் காட்சிகள் வரவேற்பைப் பெறுகின்றன.

வட இந்திய இணை ஆணையர் வேடத்தில் நடித்திருக்கும் கவின் ஜெய் பாபு அதிகாரத்திமிரின் உச்சத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கதையின் மையமாக விளங்கும் வேடத்தில் நடித்திருக்கிறார் இனியா. சில காட்சிகளில் வந்தாலும் சிறப்பு. இணை ஆணையர் மகிழுந்து முன்பு குதிரை மீது ஏறி கம்பீரம் காட்டுமிடம் அட்டகாசம்.

காவல்நிலையத்தில் எடுபிடியாக வரும் மேற்குத் தொடர்ச்சி மலை ஆண்டனி வேடம் நன்று, இயல்பாக நடித்து நம்மைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறார். படம் வேகமாக நகரவும் உதவியிருக்கிறார்.

பிரதீப்காளிராஜா ஒளிப்பதிவு அளவு. சமுத்திரக்கனியின் நடிப்புக்கு ஒளிப்பதிவும் பக்கபலம்.

கோவிந்த்வசந்தாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசை இயல்பு.

எழுதி இயக்கியிருக்கிறார் பிராங்க்ளின் ஜேக்கப். எங்கோ ஓர் ஆராய்ச்சி மாணவன் படிப்புக்காகத் தொடும் விசயம் எவ்வளவு பெரிய சிக்கலாக மாறுகிறது என்பதை அழகான திரைக்கதையாக்கியிருக்கிறார்.

அரசாங்கத்தின் மிகப்பெரிய அங்கமான காவல்துறையில் சாதியப்பாகுபாடு இருக்கிறது என்று அவர் சாட்டியிருக்கும் குற்றச்சாட்டு அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தால் நல்லது.

Related Posts