எனிமி – திரைப்பட விமர்சனம்
ஆர்யா புத்திசாலி விஷால் அதிபுத்திசாலி. விஷாலைப் பார்த்து ஆர்யாவுக்குப் பொறாமை. அதனால் பதிமூணு வயதில் தொடங்கும் போட்டி 33 வயதுவரை நீடிப்பதுதான் எனிமி.
பரபரப்பான சண்டைகள், கலகலப்பான பாடல்கள், ்அப்பா பாசம், தமிழ் மக்கள் மீது பற்று என விஷாலுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார் இயக்குநர். அவரும் முடிந்த அளவு செய்திருக்கிறார்.
ஸ்டைலாக நடப்பது, உடலசையாமல் வில்லத்தனம் செய்வது, மனைவிக்காகத் துடிப்பதென ஆர்யாவுக்கும் நிறைய வேலைகள். அவரும் நடிக்க முயன்றிருக்கிறார்.
மிருணாளினி இன்னும் கதாநாயகிக்கான இடத்தைப் பெற வெகுதூரம் பயணிக்க வேண்டும்.
சில காட்சிகளில் மட்டும் வருகிற மம்தா மோகன்தாஸ் பொருத்தம்.
தம்பிராமய்யா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் வழக்கமான மிகை நடிப்பை வாரி வழங்கியிருக்கிறார்கள்.
நகைச்சுவைக்கென இருக்கும் கருணாகரன் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
கதைக்களம் சிங்கப்பூர் என்பதால் துபாய் போய்ப் படமாக்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகருக்கு அது வசதியாகப் போய்விட்டது.
தமனின் இசையில் பாடல்கள் பரவாயில்லை.
சாம்.சி.எஸ் பின்னணி இசையமைக்கக்கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என நினைத்து கொஞ்சம் அதிகமாகவே வாசித்துவிட்டார்.
இரண்டு முன்னணி நடிகர்கள் நல்ல கதைக்களம் ஆகியனவற்றைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் ஆனந்த்சங்கர் கதையில் கோட்டை விட்டுவிட்டார்.
சுவாரசியமான சில காட்சிகள், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடக்கும் ஆபத்துகள் ஆகியன படத்தை நகர்த்திச் செல்ல உதவுகிறது.
எனிமி ஏமாற்றம்












