தேவ் – திரைப்பட விமர்சனம்
பிறக்கும்போதே அம்மாவை இழந்து அப்பா வளர்ப்பில் வளரும் கார்த்தி, பணம் மட்டும்வாழ்க்கையில்லை பயணங்களிலிருக்கிறது வாழ்க்கை என்று உற்சாகமாக நண்பர்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்..
சிறுவயதில் அப்பாவிட்டுவிட்டுப் போய்விட கஷ்டப்பட்டு அம்மா வளர்த்த பெண் ரகுல்பிரீத்சிங். அமெரிக்காவில் பெரும்தொழிலதிபராக இருக்கிறார். ஆண்கள் மேல் வெறுப்பாக இருக்கிறார்.
இவ்விருவருக்குமான காதல் அதன்பின்னான மோதல் ஆகியனதாம் தேவ்.
பயணமும் காதலும் ஒருங்கே அமைந்த கதை என்பதால் ஏற்கெனவே பையா பட அனுபவமும் கைகொடுக்க நன்றாக நடித்திருக்கிறார் கார்த்தி.
எவ்வளவு தத்துவங்கள் பேசினாலும் வாழ்க்கை பற்றிய தெளிவு இருந்தாலும் அவை எல்லாவற்றையும் தாண்டி வலியைக் கொடுக்கக் கூடியது காதல் என்பதைத் தன் நடிப்பால் உணர்த்துகிறார் கார்த்தி.
பெரும்தொழிலதிபருக்குரிய மிடுக்கு காதல் வந்த பின் இருக்கும் நெகிழ்வு அதன்பின்னான கோபம் ஆகிய எல்லாவற்றையும் சரியாக வெளிப்ப்டுத்துகிறார் ரகுல்பிரீத்சிங்.
விக்னேஷ் அம்ருதா ஆகிய இருவரும் கார்த்தியின் நண்பர்களாகப் படம் முழுக்க வருகின்றனர். மூவரும் ஆண்கள் என்று வைக்காமல் அம்ருதாவை கார்த்தியின் நண்பராக்கி,கார்த்தி விக்னேஷ் ஆகிய இரு ஆண்களோடு அவர் உலகம் முழுக்கப் பயணிக்கிறார் என்று வைத்து நட்புக்கு ஆண் பெண் பேதம் இல்லை என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
அமெரிக்கா, உக்ரேன், வட இந்தியா,மும்பை என திரைக்கதை பயணிக்கிறது. அவற்றை அவற்றின் அழகுகளை வேல்ராஜின் ஒளிப்பதிவு அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறது.
கார்த்தி ரகுலிடம் காதல் சொல்லும் இடமும் அழகும் அற்புதம். இப்படம் பார்க்கிற காதலிகள் தங்கள் காதலர்களிடமும் இதுபோல் எதிர்பார்க்கக்கூடிய ஆபத்து இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கபிலன் எழுதியுள்ள எங்கேடி நீ போன என்னை விட்டு பாடல் ஆழ்கடல் போல் அமைதியும் அழுத்தமும் நிறைந்த சுகம் தரும் பாடலாக அமைந்திருக்கிறது.
பாடல்களுக்கு நடுவே வசனங்களும் காட்சிகளும் வருவது பாடல்களை முழுமையாக ரசிக்க முடியாமல்; செய்கிறது.
மனித மனங்களுக்கு இடையே உள்ள தூரத்தை அடிப்படையாக வைத்துக் கதை எழுதியிருக்கும் இயக்குநர் ரஜத்ரவிஷங்கர், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் புதுமை செய்திருக்கலாம். விக்னேஷை வைத்து கதை சொல்லியிருப்பதால் படம் நெடுகப் பேசிக்கொண்டேயிருக்கும் உணர்வு வருகிறது.
பிரகாஷ்ராஜ் என்கிற அப்பாவை இளைஞர்களும் ரம்யாகிருஷ்ணன் போன்ற அம்மாவை இளம்பெண்களும் விரும்பும் வகையில் படைத்திருக்கிறார் இயக்குநர்.
எல்லாக் கதாபாத்திரங்களையும் தனித்தனியாக ரசிக்கக் கூடிய வகையில் படைத்ததோடு கதைக்களம் அது பயணிக்கும் பாதை ஆகியனவற்றிலும் சிரத்தை காட்டியிருக்கும் இயக்குநர் அவற்றைக் கோர்த்துக் கொடுப்பதில் தோற்றிருக்கிறார்.











