விமர்சனம்

லாந்தர் – திரைப்பட விமர்சனம்

கால எல்லைகள் வகுத்து எழுதப்படும் திரைக்கதைகளில் ஒரு வேகம் விறுவிறுப்பு இருக்கும்.இந்தப்படமும் ஒரே இரவில் நடக்கும் கதை.அதில் இருவேறு கதைகள் அவை இணையும் புள்ளி என்று நகரும் படம் தான் லாந்தர்.

காவல்துறை அதிகாரி விதார்த், இருட்டு மற்றும் அதிக சத்தம் கேட்டால் பயப்படும் நோய் உள்ள மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஒரு குற்றவாளியைத் தேடி இரவில் பயணப்படுகிறார். அதேநேரம், மென்பொருள் துறையில் பணியாற்றும் இளைஞர் தன் மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு இரவு வேலைக்குச் செல்கிறார்.அதன்பின் சில எதிர்பாரா நிகழ்வுகள்.

இவ்விரண்டு கதைகளும் சந்திக்கும் புள்ளி எது? அதன்பின் என்ன நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

முதன்முறையாக காவல்துறை அதிகாரி வேடமேற்றிருக்கிறார் விதார்த்.தோற்றம் பொருத்தம் சரியாக இருக்கிறது.காவல்துறை அதிகாரி என்றாலே அதிகாரத் திமிரில் ஆடுவார் என்று காட்டப்படுவதற்கு மத்தியில் மிடுக்கைக் குறைத்து கனிவைக் காட்டி காவல்துறை அதிகாரிகள் இப்படியும் இருக்கலாம் என்று எழுதப்பட்ட வேடத்துக்கு நூறு விழுக்காடு சரியாக இருக்கிறார் விதார்த்.

விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, இருட்டைக் கண்டால் பயப்பட்டு நம்மையும் பயப்பட வைக்கிறார்.

மென்பொருள் பணியாளராக நடித்திருக்கும் விபின் அவர் மனைவியாக நடித்திருக்கும் சஹானா ஆகியோரும் கதையின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

கஜராஜ்,பசுபதிராஜ் உள்ளிட்டோரும் குறைவில்லை.

இரவில் நடக்கும் கதை என்பதால் ஒளிப்பதிவாளர் ஞானசெளந்தருக்குக் கூடுதல் வேலை.காட்சிகளைக் கச்சிதமாகக் காட்டி நெருடலில்லாத காட்சியனுபவம் கொடுக்கிறார்.

எம்.எஸ்.பிரவீனின் பின்னணி இசை அளவு. பாடல்கள் சுமார் இரகம்.

இயல்பை மீறிய இரு கதைகளை வைத்துக் கொண்டு மர்மமும் வேகமும் கலந்து ஒரு படத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் இயக்குநர் சாஜிசலீம்.அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

– இளையவன்

Related Posts