ஐ எம் கேம் – திரைப்பட விமர்சனம்
பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் துல்கர் சல்மான்,அப்பாவின் விருப்பப்படி தொழிலைக் கவனிக்கிறார்.அதேநேரம் சூதாட்டத்துக்கும் அடிமையாகிறார்.அதனால் கடன் சிக்கலில் சிக்குகிறார்.அந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது.அதனால் அவருக்கு ஒரு சக்தி கிடைக்கிறது.அவருக்கு என்பதைவிட அவருடைய கைக்கு என்று சொல்லலாம்.அதனால் அவர் வாழ்க்கையில் பல மாற்றங்கள்.அவை என்னென்ன? அவற்றின் விளைவுகள் என்னென்ன? என்பதைச் சொல்வதுதான் படம்.
துல்கர்சல்மான்,இந்தப்படத்திலும் தன் ஆளுமையை நிறுவியிருக்கிறார்.நல்லவர் வல்லவர் என்பதற்கு மாறாக சூதாடி என்கிற வேடத்தை ஏற்றாலும் அதிலும் இரசிக்க வைக்கிறார்.கைக்கு ஒரு சக்தி கிடைத்த பிறகு வரும் காட்சிகளில் அவருடைய உடல்மொழி மற்றும் முகபாவனைகள் வேறு இரகம்.
நாயகியாக நடித்திருக்கிறார் கயாடுலோகர்.மருத்துவராக நடித்திருக்கிறார்.அவர் மருத்துவராக இருந்தால் எல்லோரும் நோயாளியாக இருக்க விரும்புவார்கள் எனுமளவுக்கு அவருடைய பாத்திரப்படைப்பும் நடிப்பும் எல்லாவற்றிற்கும் மேலாக சிரிப்பும் அமைந்திருக்கிறது.
ஆண்டனிவர்கீஸ் கதாபாத்திரமும் அது துல்கர் கதாபாத்திரத்தோடு இரண்டறக் கலந்து பயணப்படுவதும் சுவாரசியமாக இருக்கிறது.அதற்கேற்ப அவரும் நடித்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின்.மாவீரன் படத்தில் பார்த்ததுபோல்வே இந்தப்படத்திலும் அவருடைய பாத்திரப்படைப்பும் நடிப்பும் இருக்கிறது.
கதிர்,சம்யுக்தா விஸ்வநாதன்,வினய் ஆகியோருடைய கதாபாத்திரங்களும் திரைக்கதைக்குத் தேவையான அளவில் இருக்கின்றன.அவர்களும் பொறுப்புடன் நடித்திருக்கிறார்கள்.
ஜிம்ஷி காலித் ஒளிப்பதிவில் திரைக்கதையில் இருக்கும் பல்வேறு உணர்வுகளுக்கேற்ற ஒளியமைப்பை வைத்திருக்கிறார்.துல்கரின் பல்வேறு உணர்வுகளையும் காட்சிகளில் மெருகேற்றியிருக்கிறார்.கயாடு லோகர் வரும் காட்சிகள் இனிமையாக இருக்கின்றன.
ஜேக்ஸ்பிஜாயின் பின்னணி இசை ஒரு கதாபாத்திரம் போலவே கதை சொல்ல உதவியிருக்கிறது.
சாமன் சாக்கோ படத்தைத் தொகுத்திருக்கிறார்.திரைக்கதையில் இருக்கும் தடுமாற்றங்களை தொகுப்பில் சரிசெய்ய முயன்றிருக்கிறார்.ஆனாலும் சில இடங்களில் பலவீனம் தெரிகிறது.
திரைக்கதை எழுதியிருக்கிற சஜீர் பாபா, பிலால் மொய்து, இஸ்மாயில் அபூபக்கர் ஆகிய மூவரும் ஏதேதோ யோசித்து செயல்பட்டிருக்கிறார்கள்.சூதாட்டம் குறித்து நிறைய சொல்லவேண்டும் என நினைத்து மட்டைப்பந்தாட்டத்தில் நடக்கும் சூதாட்டங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.நீளமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
கதை எழுதி இயக்கியிருக்கிறார் நஹாஸ் ஹிதாயத்.வழக்கமாக ஒரு ஆள் இன்னொரு ஆளைப் பழிவாங்கத் துடிப்பார் என்பதற்கு மாறாக ஒரு கை அந்த வேலையைச் செய்கிறது என்று மாற்றி யோசித்து ஒரு சுவையான மையக்கதையை எழுதியிருக்கிறார்.அதை திரைக்கதையாக்கிய வகையில் பலவீனம் இருந்தாலும் துல்கர் காப்பாற்றுகிறார்.
– வெற்றி












