விமர்சனம்

ராஜாமகள் – திரைப்பட விமர்சனம்

ஏழைகளின் அத்தியாவசியக்கனவு ஒரு சொந்தவீடு.எதார்த்தம் புரிந்தவர்கள் அந்தக்கனவை மனசுக்குள் புதைத்துவிட்டு நடமாடிக்கொண்டிருப்பார்கள். ஆனால் குழந்தைகள் அப்படியிருக்காது என்பதைச் சொல்வதோடு அதன் விளைவுகள் குறித்தும் பேசியிருக்கும் படம் ராஜாமகள்.

ஏராளமான படங்களில் நாயகனின் நண்பராக வந்து நகைச்சுவை செய்து கொண்டிருந்த ஆடுகளம் முருகதாஸ் இந்தப்படத்தில் நாயகன். கதைக்கேற்றவர். வாடகை வீட்டில் மனைவி மற்றும் ஒரு பெண்குழந்தையுடன் வசிக்கும் அவர் வீட்டில் வறுமை இருக்கிறது. ஆனால் மகள் மீது காட்டும் பாசத்தில் அவர் கோடீசுவரர். மகள் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பார்.அந்த மகள் ஒரு பெரியவீட்டை சொந்தவீடாக்கிக் கொள்ள ஆசைப்படுகிறார். அதையும் நிறைவேற்ற முயல்கிறார் முருகதாஸ்.அதனால் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்லியிருக்கிறது படம்.

முருகதாஸ் நடுத்தரவர்க்கத்தினராக நல்ல கணவராக பாசமிக்க அப்பாவாக ஆகிய எல்லாப்பாத்திரங்களிலும் நிறைவாக இருக்கிறார். கதாநாயகன் என்பவர் கதைக்கேற்றவராக இருக்கவேண்டும் என்பதற்கு இந்தப்படத்தையும் இவர் வேடத்தையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

முருகதாசின் மனைவியாக நடித்திருக்கும் பிராங்க்ளினும் நடுத்தரக்குடும்பப் பெண்களைப் பிரதியெடுத்திருக்கிறார்.மகளின் ஆசையையும் கணவரின் தவிப்பையும் சுமந்துகொண்டு அவர் படும்பாடு கலங்க வைக்கிறது.

சிறுமி பிரதிக்‌ஷாவின் வேடமும் நடிப்பும் சிறப்பு. இந்தச் சின்னவயதில் இவ்வளவு இயல்பாக நடித்திருப்பது பார்ப்போரை வியக்கவைக்கிறது.

ஹென்றி.ஐ எழுதி இயக்கியிருக்கிறார். கதையிலும் கதாபாத்திரத் தேர்வுகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். மகளுக்கு இவ்வளவு செல்லம் கொடுக்கலாமா? என்று ஆடுகளம் முருகதாஸ் மீது பார்வையாளர்களுக்குக் கோபம் வருவது இயக்குநருக்குக் கிடைக்கும் பாராட்டு எனலாம்.

– குமார்

Related Posts