விமர்சனம்

கடைக்குட்டி சிங்கம் – திரைப்பட விமர்சனம்

உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் பாரதி, உழவுக்கும் உறவுக்கும் வந்தனம் செய்வோம் என்கிறார் பாண்டிராஜ்.

இரண்டு மனைவிகள் ஐந்து பெண் குழந்தைகள் என்று வாழும் பெரிய குடும்பஸ்தர் சத்யராஜூக்குக் கடைசியாக கார்த்தி பிறக்கிறார்.அவர்தான் கடைக்குட்டி சிங்கம் கார்த்தி. படத்தின் பெயருக்கு நியாயம் செய்தாயிற்று.

பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்காத அவர் பேராசையுடன் விவசாயம் செய்கிறார். மாதம் ஒன்றரை இலட்சம் சம்பாதிக்கிறார்.

இரண்டு அக்கா மகள்கள் இவரைத் திருமணம் செய்துகொள்ளும் ஆசையில் இருக்க, இவருக்கோ நாயகி சாயிஷா மேல் காதல்.

நாயகியைத் திருமணம் செய்தால் குடும்பம் உடையும், குடும்பத்தை உடையாமல் பாதுகாத்து காதலிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் கார்த்திக்கு.

இதுமட்டுமே இருந்தால் போதாது என்று கருதி, சமுதாயச் சிக்கல் ஒன்றினால் கார்த்தியைக் கொலை செய்து அந்தக்குடும்பத்தையும் உடைக்க வேண்டும் என்று அலையும் வில்லன் கூட்டம்.

கடைசியில் என்ன ஆகும்? என்ன ஆகிவிடும்?

விவசாயின்னு பத்திரிகையில பேர் போட்டா சிரிப்பாங்க என்றவுடன் செருப்பால அடிப்பேன் என்று பொங்கும் கார்த்தி படம் முழுக்க அடித்து ஆடியிருக்கிறார்.

காதல், சண்டை, குடும்பப்பாசம், சோகம் ஆகிய எல்லாவற்றையும் வெளிப்படுத்த வேண்டிய வேடம். அதில் எந்தக் குறையும் வைக்காமல் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

கார்த்தியின் அப்பா சத்யராஜ் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார் என்று புதிதாகச் சொல்லவேண்டியதில்லை.

நாயகி சாயிஷா அழகு.

படத்தின் பெரும்பலம் சூரி. கொஞ்சம் விட்டால் ஆவணப்படம் போல் ஆகிவிடக்கூடிய ஆபத்தைத் தடுத்து நிறுத்தி சிரிப்பு வெடிகளால் படத்தை இலகுவாக்கிவிட்டார்.

இவ்வளவு மாஸ் இருக்கு இதையாடா தடுத்தீங்க என்று மத்திய அரசை விமர்சிப்பதில் தொடங்கி சூரி பேசும் வசனங்கள் வாய்விட்டுச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன.

பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்த பிரியாபவானிசங்கருக்குப் போதிய இடம் இல்லை. கிடைத்த சின்ன வாய்ப்பிலும் அவர் தன் இருப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னொரு அக்கா மகளான அர்த்தனாபினுவும் சோடை போகவில்லை.

பானுப்பிரியா, விஜிசந்திரசேகர், சரவணன், மெளனிகா உட்பட படத்தில் ஏராளமானோர் இருக்கிறார்கள்.

கலகலவென்று போகிறது முதல் பாதி. இரண்டாம் பாதியில் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படுவதெல்லாம் ஏற்கெனவே பார்த்துச் சலித்தவையாகவே இருக்கின்றன.

இரண்டு மனைவிகள், ஆண் குழந்தைக்காகத் திருமணம் போன்ற பழைய விசயங்களைக் கையிலெடுத்து அவை விமர்சனத்துக்காளாகிவிடக் கூடாது என்பதற்காக, கடைசியில் பெண் குழ்ந்தை பிறந்தவுடன் குடும்பக்கட்டுப்பாடு செய்து சமன் செய்கிறார் இயக்குநர்.

ஆணவக் கொலை செய்யும் கொடியரசு வேடம் தற்போதுள்ள அரசியல்வாதிகளை விமர்சிக்கப் பயன்பட்டிருக்கிறது.

வேல்ராஜின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது. பசுமையான வயல்வெளிகளும் கரைததும்பி ஓடும் கால்வாய்களும் மனதுக்கு இதமாக இருக்கின்றன.

இமானின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் பொருத்தம்.

நிலவுடைமைச் சமூகத்தின் பழைய வாழ்க்கை முறையையும், விவசாயத்தின் அவசியத்தையும் இன்றைய தலைமுறை தெரிந்துகொள்ள இந்தப் படம் பயன்படும்.

Related Posts