96 – திரைப்பட விமர்சனம்
காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;
கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;
ஆதலினால்,காதல் செய்வீர்;உலகத்தீரே
அஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்.
என்கிற பாரதியின் வரிகளுக்குத் திகட்டத் திகட்ட எழுதப்பட்டுள்ள உணர்வுரைதாம் 96.
அடர்ந்த வனம், ஆழக்கடல்,பசுமை வெளி, பாலைவனம் என்று இயற்கையைத் தேடி வெறிகொண்டு அலையும் புகைப்படக்காரராக விஜய்சேதுபதி அறிமுகம் ஆகும்போதே இதுவேற படம் என்கிற எண்ணம் நிறைகிறது.
இருபத்து நான்காண்டுகளுக்குப் பிறகு தான் படித்த பள்ளிக்குச் சென்று வகுப்பறை, மரநிழல், மைதானம் என்று ஒவ்வொன்றாய் நமக்கு விஜய்சேதுபதி அறிமுகம் செய்யும்போதே அழகான பின்கதை இருக்கிறது என்கிற நம்பிக்கை வருகிறது.
அதுபோலவே 96 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் கூடும் நிகழ்வை ஒருங்கிணைக்கிறார்கள்.
அந்த ஒருநாள் இரவில் விஜய்சேதுபதி த்ரிஷா ஆகியோரின் காதலாகிக் கசிந்துருகும் நிகழ்வுகளில் மனசுக்குள் இளமழை பொழிகிறது.
விஜய்சேதுபதியின் வேடம் பேராண்மை. அதற்கு நூறுவிழுக்காடு நியாயம் செய்திருக்கிறார் மனிதர்.
அநியாயத்துக்கு வெட்கப்படுகிறார். த்ரிஷாவின் குறிப்பறிந்து அவர் செய்யும் சேவைகள் ஒவ்வொரு பெண்ணையும் பொறாமைப்படவைக்கும்.
அலட்டல் இல்லாத அமைதியான அழகி த்ரிஷா. ராம் வந்திருக்கான் அங்க ஒளிஞ்சிருக்கான் என்று சொன்னதும் உள்ளம் அதிர அவர் நடக்கும் நடையில் நம் நெஞ்சுக்குள் பூகம்பம், கைவிளக்கு வெளிச்சத்திலிருந்து மின்விளக்கு வெளிச்சத்துக்குக் கண்கள் மாறுவதைக்கூட கவிதை போல் வெளிப்படுத்தி அசத்துகிறார்.
சிறுவயது விஜய்சேதுபதியாக நடித்திருக்கிற எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா சிறப்பு. பதின்பருவ மிடுக்கையும் நாணத்தையும் நன்றாக வெளிப்படுத்துகிறார். அவருடைய திரைப்பயணத்துக்கு இந்தவேடம் அருமையான தொடக்கம்.
சிறுவயது த்ரிஷாவாக நடித்திருக்கும் கவுரிகிருஷ்ணன். அவர் எப்போதும் பாடிக்கொண்டே இருக்கமாட்டாரா என்று ஏங்க வைக்கும் பாத்திரப்படைப்பு.
பகவதிபெருமாள், தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ், மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜனகராஜ் என்று படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு பாத்திரமும் பொருத்தம். சின்னச் சின்ன அசைவுகளில் கூட சிரிக்கவைக்கிறார்கள்.
சண்முகசுந்தரம் ஒளிப்பதிவின் சிறப்புக்கு விஜய்சேதுபதியின் இயற்கையைத் தேடும் பயணம் நற்சான்று. திரைக்கதையின் உணர்வுகளைக் காட்சிகளில் கடத்தியிருக்கிறார்.
கோவிந்த்வசந்தாவின் இசையில் காதலே பாடல் நன்று. இருப்பினும் இளையராஜா எஸ்.ஜானகி கூட்டணியின் பாடல்கள் முன்பு சூரியஒளியில் கரையும் குழல்விளக்காகிவிட்டது.
இயக்குநர் சி.பிரேம்குமார் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். விஜயசேதுபதி த்ரிஷா ஆகிய இருவர் மட்டும் பெரும்பகுதிப் படத்தில் வருகிறார்கள். அது குறையாகத் தெரியாமல் இன்னும் கொஞ்சநேரம் தொடராதா? என்று நினைக்க வைக்கிற இடத்தில் பெருவெற்றி பெற்றிருக்கிறார்.
விஜய்சேதுபதி போலவே நம்மையும் யமுனை ஆற்றிலே பாடல் எப்போது வரும் என்று எதிர்பார்க்கவைக்கிறார். திடுமென அப்பாடல் ஒலிக்கும்போது பின்னணி இசையைக் காட்டிலும் நம் இதயம் வேகமாகத் துடிக்கிறது.
விஜய்சேதுபதியின் அறையில் நம்மாழ்வார் படம், தண்ணீர் குடிக்க செம்புக்குவளை என நுட்பமாகப் பல இடங்களில் கவனிக்க வைத்திருக்கிறார்.
ஓரிரவுக்குள் ஓராயிரம் வாய்ப்புகள் இருந்தும் உணர்வுகளை மட்டும் உரையாட வைத்ததற்காகவே இயக்குநரைப் பாராட்டலாம்.
ஆதலினால் இப்படத்தைக் காண்பீரே அதுவன்றோ இனிய இன்பம்.











