கைலா – திரைப்பட விமர்சனம்
படத்தின் நாயகி தானாநாயுடு. எழுத்தாளரான அவர், பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்து ஒரு நாவல் எழுதவிரும்புகிறார். .
தோழிகளுடன் சேர்ந்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்.
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டைத் தேர்ந்தெடுக்கிறார். அந்த வீட்டின் பிரச்சனையை ஆராயத் துவங்குகிறார்.
இன்னொரு பக்கம், ஒரு தாய் அவருடைய சிறுவயது மகள் ஆகியோர் தற்கொலை செய்கிறார்கள், தொழிலதிபர்கள் இருவர், ஒரு காவல்துறை அதிகாரி ஆகியோர் மர்மமாக மரணமடைகிறார்கள்.
அதுபற்றிய காவல்துறை விசாரணையும் நாயகியின் ஆராய்ச்சியும் சந்திக்கும் புள்ளியில் ஆச்சரியம் காத்திருக்கும் படம்தான் இது.
நாயகி தானாநாயுடு அமைதியாக அதேநேரம் அழுத்தமாக நடித்திருக்கிறார்.
அவருக்கு அடுத்து குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவர் படத்தின் இயக்குநர் பாஸ்கர் சீனுவாசன். வில்லன் வேடத்துக்குப் பொருத்தமான பார்வை உடல்மொழி ஆகியன அமைந்திருக்கின்றன.
கவுசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர் மனோகர், பேபி கைலா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
பரணிசெல்வத்தின் ஒளிப்பதிவு பேய்ப்படங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதைச் செய்திருக்கிறது.
ஸ்ரவனின் இசை தாழ்வில்லை. பாடல்கள் கேட்கும் ரகம்.
திரைக்கதையில் புத்திசாலித்தனம் இருக்கிறது. வேகம் இல்லை.
நாயகி பல இடங்களில் நிறுத்தி நிறுத்திப் பேசுவது பொறுமையைச் சோதிக்கிறது.
இறுதியில் பேய் பற்றிய முடிச்சு அவிழும் இடம் நன்று. அதுவரை காத்திருப்பது பெரிய விசயம்.











