விமர்சனம்

மாமன்னன் – திரைப்பட விமர்சனம்

குடியரசுத்தலைவராகவே இருந்தாலும் அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவ்ர் என்பதால் அவமானப்படுத்தப்படும் நாடு நம் நாடு.இக்கொடுமைக்கும் அநீதிக்கும் எதிராக ஓங்கிக் குரல்கொடுத்திருக்கும் படம்தான் மாமன்னன்.

சட்டமன்ற உறுப்பினராகவே இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் என்பதால் ஆதிக்கசாதி மாவட்டச் செயலாளர் முன் உட்காரவியலாத நிலையில் இருக்கிறார். இதை அறிந்து கொதித்துப் போகும் அவருடைய மகன் உதயநிதி செய்யும் அதிரடிகளால் பல பரபரப்பான நிகழ்வுகள் நடக்கின்றன. அவை என்னென்ன? அவற்றின் முடிவென்ன? என்பதுதான் திரைக்கதை.

இதுநாள் வரை நகைச்சுவை மன்னனாக வலம் வந்த வடிவேலு மாமன்னனாக அவதாரம் எடுத்திருக்கிறார்.தோற்றத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் புதிய பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார். எதார்த்த நிலையை உணர்ந்திருக்கும் அதேநேரம் மகனுடைய கேள்விகளில் உள்ள நியாயத்தையும் அறிந்து இரண்டுக்கும் நடுவிலான போராட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் வடிவேலு.

ஒருகல் ஒருகண்ணாடியில் சாதாரணமாகத் தொடங்கி மனிதன், நெஞ்சுக்கு நீதி, கலகத்தலைவன் என படிப்படியாக உயர்ந்து இந்தப்படத்தில் உச்சம் தொட்டிருக்கிறார் உதயநிதி.கதாநாயகன் பன்றி வளர்க்கிறார் என்பதே இதுவரை தமிழ்த்திரையுலகம் காணாத நிகழ்வு.அதை ஏற்றதோடு அறச்சீற்றத்தை அடிப்படையாகக் கொண்ட வேடத்தின் தன்மையை முழுமையாக உள்வாங்கி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆதிக்கசாதிகளின் பிரதிநிதியாக நடித்திருக்கும் ஃபகத்பாசில் மிகச்சிறப்பாக நடித்து காலங்காலமாக நடந்துவரும் அவலத்தை அம்பலமேற்றியிருக்கிறார்.

நாயகி கீர்த்திசுரேஷுக்கும் வழக்கமான கதாபாத்திரம் இல்லை. மையக்கதையை நோக்கி திரைக்கதையை மடைமாற்றும் முக்கியமான கதாபாத்திரம். அதற்கேற்ப நடித்திருக்கிறார்.

முதலமைச்சராக நடித்திருக்கும் லால் உட்பட படத்தில் நடித்திருக்கும் அனைவருமே பொருத்தமாக இருக்கிறார்கள்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் கதையில் இருக்கும் அனல் காட்சிகளிலும் தெரிகிறது.

இலயிக்க வைக்கும் பாடல்களைக் கொடுத்த ஏ.ஆர்.ரகுமான், பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.பல காட்சிகளுக்குக் கண் திறந்தது போல அமைந்திருக்கிறது அவரது இசை.

உன்னை உட்கார வைக்காதது என் அடையாளம் உன் மகனை உட்காரச் சொன்னது என் அரசியல் என்பது உட்பட படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்கள் கூர்மையானவை. பெரியார் படம் புத்தர் படம் ஆகியனவற்றைச் சரியான இடங்களில் காட்டி கைதட்டல் பெறுகிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ்.

தற்போது மன்னனாக இருக்கும் உதயநிதி இப்படத்தின் கதையை ஏற்று நடித்ததோடு தயாரித்துமிருப்பதால் மாமன்னன் ஆகும் தகுதி பெறுகிறார்.

– சித்திரன்

Related Posts