விமர்சனம்

ஹவுஸ் மேட்ஸ் – திரைப்பட விமர்சனம்

க்ளாஸ் மேட்ஸ் என்றால் வகுப்புத் தோழர்கள் என்பது ஹவுஸ் மேட்ஸ் என்றால்? ஒரு வீட்டுத் தோழர்கள் என்று பொருள்.எதற்காக இந்தப் பெயர்? என்பதற்கான விளக்கத்தை சுவாரசியமாகச் சொல்லியிருக்கும் படம்தான் ஹவுஸ்மேட்ஸ்.

காளி வெங்கட் அவர் மனைவி வினோதினி அவர்கள் மகன் ஹென்ரிக் ஆகியோர் வசிக்கும் வீட்டை விலைக்கு வாங்குகிறார்கள் தர்ஷன், அர்சா பைஜு தம்பதியினர். ஒருவர் குடியிருக்கும் வீட்டில் இன்னொருவர் எப்படிக் குடியேறமுடியும்? என்பதற்கான விடைதாம் படம்.

நாயகனாக நடித்திருக்கும் தர்ஷன், காதலன், இளம் கணவன், மாமனார் கேட்ட கேள்விக்காக வீடு வாங்கும் வீரியஸ்தன் ஆகிய மாறுபட்ட பல உணர்வுகளை நடிப்பால் வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகி அர்ஷா பைஜு அழகாக இருக்கிறார்.காதலையும் பயத்தையும் கண்களிலேயே வெளிப்படுத்தி கவர்கிறார்.

படத்தின் இன்னொரு நாயகனாக, நடுத்தர வர்க்கக் கணவராக ந்டித்திருக்கும் காளி வெங்கட் வழக்கம்போல் சிறப்பாக நடித்திருக்கிறார்.அவர் மனைவியாக நடித்திருக்கும் வினோதினி அவருக்கு ஈடுகொடுத்திருக்கிறார்.

தீனா,அப்துல் லீ ஆகியோரும் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.சதீஷுக்குக் குறைவான இடம்தான் என்றாலும் அதில் நிறைவான காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.

ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசையில் திரைக்கதைக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது.

படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் உழைப்பு மிக முக்கியமானது. கொஞ்சம் பிசகினாலும் குழப்பி விட்டுவிடக் கூடிய திரைக்கதையைக் குழப்பமின்றித் தொகுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கும் டி.ராஜவேல், டைம் டிராவல், டைம் லூப் ஆகியன போல் டெசரக்ட் எனும் புதிய முறைமையை அறிமுகப்படுத்துகிறார்.

2012 இல் ஒரு குடும்பம் 2022 இல் ஒரு குடும்பம். 2012 இல் இருந்தவர்கள் வீட்டில் 2022 ஆம் ஆண்டு அந்தவீட்டில் குடியேறுபவர்களுக்கு 2012 காலத்துக்காரர்களும் அங்கேயே இருப்பது போல் ஒரு தோற்றமயக்கம்.அதனால் என்னென்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை சுவாரசியமான திரைக்கதையாக்கிக் கொடுத்திருக்கிறார்.

இரசிகர்களுக்கு புதிய அனுபவம்.

– இளையவன்

Related Posts