ஜாக்கி – திரைப்பட விமர்சனம்
மதுரை பகுதிகளில் நடக்கும் கிடா சண்டைகள்,அவற்றில் கிடைக்கும் வெற்றி தோல்விகள், அதன் பின்விளைவுகள் ஆகியனவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படம் ஜாக்கி.
தானி ஓட்டுநரான நாயகன் யுவன் கிருஷ்ணா, கிடா சண்டை மீது அதிக ஈடுபாடு உள்ளவர்.பணக்காரரான எதிர்நாயகன் ரிதன் கிருஷ்ணா கிடா சண்டையைக் கவுரவமாக நினைப்பவர்.யுவன் கிருஷ்ணாவின் கிடா, ரிதன் கிருஷ்ணாவின் கிடாயை வீழ்த்துகிறது.அதனால் நாயகன் மீது பகை பாராட்டுகிறார் எதிர்நாயகன்.இதனால், இருதரப்புக்கும் இடையே அடிக்கடி அடிதடி நடக்கிறது. கிடா சண்டையால் ஏற்பட்ட பகைக்கு, அதே கிடா சண்டை போட்டி மூலம் முற்றுப்புள்ளி வைக்க ஊர்ப்பெரியவர்கள் முடிவு செய்கிறார்கள்.அப்போட்டி நடந்ததா? அதன் முடிவு என்ன? ஆகிய கேள்விகளுக்கான விடைதாம் படம்.
நாயகனாக நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா, மதுரைப் பக்கத்து இளைஞராகவே மாறியிருக்கிறார்.நாயகி அம்மு அபிராமியுடன் காதலில் கசிந்துருகுகிறார்.உணர்வுப்பூர்வமான காட்சிகளில் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.சண்டைக்காட்சிகளில் கிடா போலாவே சீறியிருக்கிறார்.
எதிர்நாயகனாக நடித்திருக்கும் ரிதன் கிருஷ்ணா,பணக்காரத் திமிரை நடிப்பில் வெளிப்படுத்துகிறார்.எனக்கு ரவுடியிசமும் பண்ணத் தெரியும் என்று சொல்லி அதற்கேற்ப நடித்துமிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக, கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்.
நாயகி அம்முஅபிராமியின் அழகும் இளமையும் படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.நடிப்பிலும் தேர்ச்சி பெற்று வரவேற்பைப் பெறுகிறார்.
மதுசூதன் ராவ், சித்தன் மோகன், சரண்யா ரவி, பத்மன், யோகி, சாய் தினேஷ், சிதம்பரம், பிரவீன், ஆதவ், ஈஷா ஆகியோரும் மதுரைக்காரர்களை நினைவு படுத்தும் வண்ணம் நடித்திருப்பது வியப்பு.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார் உழைப்பில், கிடா சண்டைகளை அருகிருந்து பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.மதுரை வட்டார மண்மணமும் திரையில் நிறைந்திருக்கிறது.
சக்தி பாலாஜியின் இசையில் பாடல்கள் கேட்கலாம். கிடா சண்டைப் போட்டிகளை விறுவிறுப்பும் பரபரப்பும் ஆக்கியிருக்கிறது பின்னணி இசை.
படத் தொகுப்பாளர் என்.பி.ஸ்ரீகாந்த்,படத்தைத் தொய்வின்றி தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.
டாக்டர் பிரகாபல் எழுதி இயக்கியிருக்கிறார்.பழகிய கதைக்களம் என்றாலும் திரைக்கதை மூலம் படத்தைப் புதிதாக்க முயன்றிருக்கிறார்.அவர் எண்ணியது நடந்திருக்கிறது.
– இளையவன்











