சினிமா செய்திகள்

முதல்காட்சிக்கு ஆயிரம் ரூபாய் – வாரிசு துணிவு இரசிகர்கள் சோகம்

2023 திருநாளையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின்றன்.

இரண்டுமே பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன்னதாக அதாவது சனவரி 11 ஆம் தேதியே வெளியாகவிருக்கின்றன.

சனவரி 11 அன்று நள்ளிரவு 1 மணிக்கு துணிவு திரைப்படம் திரையிடப்படும் எனவும் அதிகாலை நான்கு மணிக்கு வாரிசு படமும் திரையிடப்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முழுக்க சுமார் ஐம்பது அல்லது அறுபது திரையரங்குகளில் நள்ளிரவுக்காட்சியும் அதிகாலைக்காட்சியும் இருக்குமென்கிறார்கள்.

இவ்விரு படங்களும் சற்றேறக்குறைய ஐநூறு திரைகளில் திரையிடப்படவிருக்கின்றன.

அவற்றிற்கு முன்னோட்டமாக ஐம்பது திரைகளில் முதல்காட்சி திரையிடப்படவிருக்கிறது.

இதற்காக நுழைவுச்சீட்டுக் கட்டணமாக ஆயிரம் ரூபாய் வசூலிக்கவேண்டும் என்று முடிவுசெய்திருக்கிறார்களாம்.

முன்பெல்லாம், திரையரங்குகளில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்துக்கொண்டு அவற்றை அதிக விலைக்கு சில தனிநபர்கள் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதன்பின் அந்தந்த திரையரங்குக்காரர்களே விநியோகஸ்தர்களுக்குத் தெரியாமல் அதைச் செய்தார்கள்.

அதற்கடுத்து திரையரங்குக்காரர்களும் விநியோகஸ்தர்களும் சேர்ந்து தயாரிப்பாளருக்குத் தெரியாமல் அதிகவிலைக்கு விற்றார்கள்.

இப்போது எல்லாம் மாறி, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்கள் ஆகிய மூவரும் இணைந்தே விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

அதன்படியே இவ்விரு படங்களுக்கும் முதல்காட்சிக்கு ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் தனது அபிமான நடிகரின் படத்தைப் பார்க்க நள்ளிரவில் எழுந்து தயாராகிவரும் திரைப்பட இரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி இப்படி அடித்துப் பிடுங்கும் வேலை தொடர்வது வேதனையானது என்று பலர் வருத்தப்படுகிறார்கள்.

Related Posts