வாரிசு துணிவு மோதலுக்கு உதயநிதி சொன்ன தீர்வு – முடியாமல் தொடரும் சிக்கல்
2023 பொங்கலையொட்டி விஜய் நடித்துள்ள வாரிசு மற்றும் அஜீத் நடித்துள்ள துணிவு ஆகிய இரண்டுபடங்களும் திரைக்கு வரும் என்கிற அறிவிப்பு வெளியானதிலிருந்தே திரையுலகில் பரபரப்பை உண்டாக்கி வருகிறார்கள்.
இவ்விரு படங்களுமே சனவரி 11 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் துணிவு படத்தை தமிழ்நாடு முழுக்க உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தை சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட ஐந்து விநியோகப்பகுதிகளில் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது மற்ற பகுதிகளில் வேறு விநியோகஸ்தர்கள் வெளியிடுகிறார்கள்.
இந்நிலையில், சனவரி 11 ஆம் தேதி அதிகாலைக்காட்சி தொடர்பாக இரண்டு படக்குழுவிற்கும் இடையே கடும்போட்டி நிலவியது.
அதனால், நள்ளிரவு ஒரு மணிக்கே வாரிசு படத்தைத் திரையிடுவது என அப்படக்குழு முடிவு செய்து அதற்கான அனுமதி கோரியது.
துணிவு படக்குழுவும் நள்ளிரவு ஒரு மணிக்குத் திரையிடுவது என முடிவெடுத்தது.இதனால் சிக்கல் உருவானது.
இரண்டு படங்களும் ஒரேநேரத்தில் வெளியானால் சட்டம் ஒழுங்குச் சிக்கல் ஏற்படும் என்கிற நிலை.
இருதரப்பினரும் பிடிவாதமாக இருந்திருக்கின்றனர். இந்நிலையில் அமைச்சர் உதயநிதியிடம் இச்சிக்கல் சொல்லப்பட்டிருக்கிறது.
அவர், ஒரு மணிக்கு துணிவு படத்தைத் திரையிடலாம், நான்கு மணிக்கு வாரிசு படத்தைத் திரையிடலாம்.
வாரிசு படம் நான்கு மணிக்குத் திரையிடும் நேரத்தில் துணிவைத் திரையிடவேண்டாம், ஒரு மணிக்கு அப்புறம் காலை எட்டுமணியிலிருந்து துணிவு,வாரிசு ஆகிய இருபடங்களும் வழக்கம்போலத் திரையிடட்டும் என்று சொல்லியிருக்கிறார்.
இதனால் சிக்கல் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே வேறொரு கோணத்தில் சிக்கல் புறப்பட்டது.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரைகள் உள்ள அரங்குகளுக்கு இது பொருந்தும் தனித் திரையரங்குகள் நிலை என்ன? வாரிசு படத்தை வாங்கியிருக்கும் தனித்திரையரங்குகள் ஒரு மணிக்குப் பூட்டிவைத்திருக்க வேண்டுமா? இரசிகர்களும் தயார் படமும் தயார் எனும்போது ஒரு மணிக்கு வாரிசு படத்தைத் திரையிட தனித் திரையரங்குகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கலாமே? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
அதேபோல துணிவு படத்தைத் திரையிட வாங்கி வைத்திருக்கும் தனித்திரையரங்குகளில் நான்கு மணிக்காட்சியும் திரையிட்டால் என்ன? அதை ஏன் தடுக்கவேண்டும்? என்கிற கேள்வியும் எழுகிறது.
இதனால் சிக்கல் முழுமையான முடிவுக்கு வராமல் நீடிக்கிறது என்றும் இன்று இறுதி முடிவு எட்டப்படும் என்றும் சொல்கிறார்கள்.











