பட்டாம்பூச்சி – திரைப்பட விமர்சனம்
பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள்.
அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள்.
இதுவரை அப்பாவியான நாயகன் வேடத்தில் மட்டுமே பார்த்துவந்த ஜெய்க்கு இந்தப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட வேடம். அதை மிகவும் இரசித்து நடித்திருக்கிறார் ஜெய். இருகைகளையும் பட்டாம்பூச்சி பறப்பதுபோல் பின்னணி இசையோடு அவர் பறக்கவிடும் விதம் இரசனை.
இவ்வளவு கொடூரமாக ஒரு வேடம். அதில் ஜெய்யைப் பொருத்திப்பார்த்ததே ஆச்சரியம். அதற்கு இருநூறு விழுக்காடு நியாயம் செய்து அவர் வரவேற்பைப் பெறுவது அதைவிட ஆச்சரியம்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சுந்தர்.சி. அதற்குப் பொருத்தமாக இருக்க முயன்றிருக்கிறார். அவருடைய அனுபவம் பெரும் பலம். அந்த வேடத்தை இயல்பாக எடுத்துச் செல்ல உதவியிருக்கிறது.
கதாநாயகி என்றில்லாமல் கதையின் நாயகியாக வருகிறார் ஹனிரோஸ். ஒரு செய்தியாளருக்குரிய மிடுக்குடன் அவர் நடந்துகொள்ளும் விதம் சிறப்பு.இறுதிக்கட்டத்தில் உயிரைக் காக்கப் போராடும் காட்சிகளில் கவர்கிறார்.
இமான் அண்ணாச்சி கொஞ்சநேரம் வந்தாலும் கவனத்தை ஈர்க்கிறார்.
கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவில் கொலைக்காட்சிகள் பயமூட்டுகின்றன.
நவ்நீத்சுந்தரின் பின்னணி இசை இயக்குநர் எண்ணத்தைச் செயலாக்குகிறது.
கைபேசி இல்லாத காலகட்டத்தைக் கதைக்களமாக எடுத்துக் கொண்டதால் எழுதி இயக்கியிருக்கும் பத்ரிக்குக் கூடுதல் வாய்ப்புகள். அவற்றைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.கொலைக்காட்சிகளில் இவ்வளவு கோடூரம் தேவையா?
கதாநாயகன் ஜெய்யை எதிர்மறை நாயகனாகப் போட்டுவிட்டதால் கடைசிக்காட்சி வரை அவரே வெல்வதாகக் காட்டியிருப்பது பலவீனம்.
கடைசிக்கும் கடைசியில் பட்டாம்பூச்சி இடம் மாறுவது நன்று.











