மணியார் குடும்பம் – திரைப்பட விமர்சனம்
ஊரில் பெரிய மணியகாரர் குடும்பம், ஊருக்கே சோறு போட்ட அக்குடும்பத்துக்கு தற்போது, வீட்டின் கதவு, சன்னல்களை விற்றுச் சாப்பிட வேண்டிய நிலை. இதற்கு என்ன காரணம்? இப்படி ஆகாமல் இருக்க என்ன செய்யவேண்டும்? இதிலிருந்து மீள்வது எப்படி? ஆகியனவற்றுக்கான விடைதான் இப்படம்.
மகன் உமாபதியை கதாநாயகனாக்க வேண்டும் என்பதற்காக அப்பா தம்பிராமையா எழுதி இயக்கியுள்ள இந்தப்படம், நகைச்சுவை, காதல், குடும்பப்பாசம், சண்டைகள் ஆகிய வியாபாரப்படத்துக்கான எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியிருக்கிறது.
உமாபதி, திரைப்பட கதாநாயகனுக்குரிய சகல தகுதிகளும் கொண்டவராக இருக்கிறார். நன்றாக இருக்கிறார். நன்றாகச் சண்டை போடுகிறார். சிறப்பாக நடனம் ஆடுகிறார். நடிப்பிலும் பழுதில்லை.
நாயகி மிருதுளா கதைக்குப் பொருத்தம். அவர் பாட்டியிடம் கதை கேட்கும் காட்சிகள் வயது வந்தவர்களுக்கானது.
இரண்டு பாடல்கள் இருந்திருந்தால் இவர்தான் நாயகன் என்றாகியிருக்கும். அந்தளவுக்கு முக்கியமான வேடம் தம்பிராமையாவுக்கு.
விவேக்பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி,ராதாரவி, பவன்,நான்கடவுள்ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட படத்தில் நிறைய நடிகர்கள். கவுரவத்தோற்றத்தில் சமுத்திரக்கனி.
பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவில் திருநெல்வேலியின்
அழகு கண்களுக்குள் நிறைகிறது.
தம்பிராமையாவே இசையமைத்திருக்கிறார். பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. நன்றாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். தினேஷின் பின்னணி இசையும் பொருத்தம்.
மணியான குடும்பம்தான், ஓசை கொஞ்சம் அதிகம் என்பதுதான் பலவீனம்.











