September 7, 2024
விமர்சனம்

கருப்பங்காட்டு வலசு – திரைப்பட விமர்சனம்

சுமார் முன்னூறு பேர் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம். கருப்பங்காட்டு வலசு. அக்கிராமத்தில் திடீரென ஒரே நாளில் நான்கு மர்ம மரணங்கள் நடக்கின்றன. 

அவை எப்படி நடந்தன? அவற்றைச் செய்தது யார்? என்பதை விசாரித்துத் தெரிவதே படம்.

பச்சைக்கிளி வாத்தியார், மல்லி,காந்திமதி, நொண்டி கருப்பன், புகைவண்டி வேலன், இரட்டைமலை உள்ளிட்ட சிலரை மையப்படுத்தி கிராம வாழ்வியலைச் சொல்ல வந்திருக்கிறார் இயக்குநர் செல்வேந்திரன்.

பச்சைக்கிளி வாத்தியாராக நடித்திருக்கும் எபிநேசர் தேவராஜ், வேடத்துக்கேற்ப ஆட்டமும் பாட்டமுமாக இருக்கிறார். எதிர்பாராமல் நடக்கும் பெருந்துயரை எதிர்கொள்ளும் அதிர்வை முகபாவங்களில் வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்.

கறுப்பு வெள்ளைகளுக்கு நடுவே ஈஸ்ட்மெண்ட் கலராக மல்லி வேடத்தில் நடித்திருக்கும் ஆரியா இருக்கிறார்.

காந்திமதி வேடத்தில் நடித்திருக்கும் நீலிமா இசைக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு ஒரு முக்கியமான வேடம். கிராமங்களிலிருந்து படித்து முன்னேறியவர்கள் எல்லாம் இவர் போல் சிந்தித்தால் எல்லாக் கிராமங்களுக்கும் நல்லது நடக்கு. பொறுப்பான வேடம் அதற்குப் பொருத்தமாக நடித்து வரவேற்புப் பெறுகிறார் நீலிமா இசை.

படத்தில் இன்னொரு நாயகனாக வருகிறார் காவல் ஆய்வாளராக நடித்திருக்கும் ஜார்ஜ்விஜய். 
ஒரு மரணத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மனதாலும் உணர்வாலும் எவ்வளவோ பாதிக்கப்படுவார்கள். ஆனால் காவல்துறைக்கு அது ஒரு வழக்கு. அதைத் திறம்பட முடித்தாக வேண்டும் என்கிற எண்ணம் மட்டுமே இருக்கும். அதை மிகச்சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ்விஜய்.

ஆதித்யா – சூர்யா ஆகியோரின் இசை அளவாக இருக்கிறது. பாடல்கள் வேறுபட்டு இருக்கின்றன.

ஷ்ரவன் சரவணனின் ஒளிப்பதிவு கதைக்குத் தேவையான மாதிரி இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் செல்வேந்திரன், சில மரணங்களை வைத்துக் கொண்டு கிராம வாழ்க்கையைப் படம் பிடித்திருக்கிறார். பிரதானமாக அறிமுகப்படுத்தும் கதாபாத்திரங்களின் மூலம் கிராமங்களின் சாதிய உணர்வு, தனி மனித வேட்கைகள், நவீனங்களால் மூத்தோர் அடையும் உளச்சிக்கல்கள் ஆகியனவற்றைப் படம் பிடித்திருக்கிறார்.

இரண்டாம்பாதியில் இருக்கும் வேகம் முதல்பாதியில் இல்லாமல் போனது பலவீனம்.  

Related Posts