சினிமா செய்திகள் நடிகர்

தொடரும் சர்கார் விவகாரம் – விஜய்யிடம் 10 கோடி வசூலிக்க வழக்கு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியானது. அதில் விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சி இருந்தது. இந்தப் படம் வெளியான சில நிமிடங்களிலேயே இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின.

விஜய் புகைப்பிடிப்பது இளைஞர்களை புகைபிடிக்க தூண்டுவதுபோல் உள்ளது என்று கண்டித்தனர்.இனிமேல் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று அவர் வாக்கை மிறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினர். எனவே அந்த காட்சியை நீக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

பசுமைத்தாயகம் அமைப்பு இதுகுறித்து பொதுசுகாதாரத்துறையிடம் புகார் செய்தது.

அதைத் தொடர்ந்து, தமிழக பொது சுகாதாரத் துறை விஜய் புகைபிடிக்கும் காட்சியை நீக்கும்படி விஜய்க்கும், ஏ.ஆர்.முருகதாசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. புகைபிடிக்கும் விஜய் படத்தை சமூக வலைத்தளத்தில் இருந்தும், இணையதளத்தில் இருந்தும் உடனே நீக்க வேண்டும் என்றும், தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. திரைத்துறையினர் அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது.

இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இருந்து புகைப்பிடிக்கும் விஜய்யின் படம் நீக்கப்பட்டது.

சுகாதாரத் துறை நடவடிக்கைக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் விஜய் புகைப்பிடிப்பதை முகப்புப் படங்களாக வைத்து எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இணையதளங்களிலும் அந்தப் படத்தை பரப்பி வருகிறார்கள்.

இந்நிலையில், விஜய், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் படத்தைத் தயாரிக்கும் சன் பிகசர்ஸ் ஆகியோர் புகைபிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறார்கள் என்றும் அதற்காக அவர்களிடம் பத்து கோடி ரூபாயை அபராதமாக வசூலிக்கவேண்டுமென்றும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரிக்க ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், விஜய் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Posts