சினிமா செய்திகள்

இயக்குநர் தயாரிப்பாளர் மோதல்? – இரண்டு வானம் பட சிக்கல்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் அவருடைய 43 ஆவது படத்தை முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களின் இயக்குநர் ராம்குமார் இயக்குவதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு அக்டோபரில் ராட்சசன் படம் வெளியான சில நாட்களிலேயே ராம்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன்பின் தனுஷின் 43 ஆவது படத்தை அவர் இயக்குகிறார், சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின் 2020 பிப்ரவரி மாதம், தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்புப் பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது என்று சொல்லியிருந்தார்கள்.அதன்பின், தனுஷ் 43 ஆக மாறன் படம் வெளியானது.

அதன்பின், ராம்குமார் தனுஷ் படம் நடக்காது என்று சொல்லிவிட்டார்கள்.அதேசமயம் அதேநிறுவனத்துக்கு சிவகார்த்திகேயன் நடிக்கும் புதியபடத்தை ராம்குமார் இயக்குகிறார் என்கிற செய்திகள் வெளியாகின.அதுவும் நடக்கவில்லை.

அதன்பின்,முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணுவிஷாலை வைத்தே அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் ராம்குமார் என்றும் அப்படத்தை சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகின.

2023 சனவரி 20 ஆம் தேதி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

அப்போதிருந்து அதன் படப்பிடிப்பு விட்டுவிட்டு நடந்து வந்தது.

2025 மார்ச் 16 அன்று இப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் வெளியானது.படத்தின் பெயர் இரண்டு வானம். அதில் நாயகன் விஷ்ணுவிஷாலும் நாயகி மமிதாபைஜுவும் இருக்கும் முதல்பார்வை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இப்படம் தொடர்பாக இயக்குநர் ராம்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறதெனச் சொல்லப்படுகிறது.

அது என்னவெனில்?

படப்பிடிப்பு தொடங்கும்போது இப்படத்தின் படப்பிடிப்பை 120 நாட்களில் முடித்துவிடுவதாக இயக்குநர் சொல்லியிருந்தாராம்.120 நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின்னும் இன்னும் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவேண்டும் என்று இயக்குநர் சொல்லியிருக்கிறார்.

இதைக்கேட்டு தயாரிப்பு நிறுவனம் கோபமாகிவிட்டதாம்.இப்போதே செலவு அதிகமாகப் போய்க்கொண்டிருக்கிறது.மேலும் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்துவதற்குப் பணம் தரவியலாது என்று சொல்லிவிட்டார்களாம்.இது தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன என்று திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதுதொடர்பாக படக்குழு தொடர்பானவர்களிடம் கேட்டால், இது மொத்தமும் தவறான தகவல், இயக்குநர் முதலிலேயே 140 நாட்கள் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று சொல்லிவிட்டுத்தான் தொடங்கினார்.அதற்கேற்பவே இப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

ஒரு பட உருவாக்கத்தின் போது அந்தக் குழுவினருக்குள் எவ்வளவு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் படம் வெளியாகி வெற்றி என்றால் எல்லாம் மறந்து போய்விடும் என்பதுதான் இயற்கை.இந்தப் படத்திலும் அப்படியே நடந்தால் அனைவருக்கும் நல்லது.

Related Posts