வெங்கட்பிரபுவின் கஸ்டடி பட்ட கஷ்டங்கள்
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா நாயகனாகவும், கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாகவும் நடித்துள்ள படம், ‘கஸ்டடி’.
இந்தப்படத்தில், அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி, பிரேம்ஜி அமரன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
மே 12 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் தெலுங்குப்பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
வெங்கட்பிரபு தமிழ்த்திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர், நாயகன்நாயகி ஆகியோர் தவிர அரவிந்தசாமி, சரத்குமார், பிரேம்ஜி ஆகியோரும் தமிழ்த்திரைப்பட இரசிகர்களின் அபிமானத்துக்குரியவர்கள்.
அதோடு இளையராஜாவும் யுவன்ஷங்கர்ராஜாவும் சேர்ந்து இசையமைத்திருக்கிறார்கள் என்கிற பெருமையையும் பெற்றுள்ள படம்.
இவ்வளவு இருந்தும் இந்தப்படத்தைத் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்ய இயலவில்லை என்கிறார்கள்.
தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமை விலை பத்துகோடி என்று படத்தயாரிப்பு நிறுவனம் சொன்னதாம். அதனால் ஒருவரும் படத்தை வாங்கி வெளியிட முன்வரவில்லை.
அதன்பின், எட்டு கோடி, ஆறு கோடி, நான்கு கோடி என விலையைக் குறைத்துக் கொண்டே வந்துள்ளனர்.
அப்படியும் யாரும் படத்தை வாங்க முன்வரவில்லையாம்.
அதன்பின், வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படம் தயாரிப்பதாக ஒப்புக்கொண்டிருக்கும் ஏஜிஎஸ் நிறுவனம், இந்தப்படத்தை இரண்டுகோடி என்றால் வாங்கி வெளியிடுகிறோம் என்று சொன்னதாம்.
எனவே, வேறுவழியின்றி இரண்டு கோடிக்கு படத்தைக் கொடுத்துவிட்டார்கள்.
அதன்பின், ஏஜிஎஸ் நிறுவனத்தினர் ரெட்ஜெயண்ட் நிறுவனத்திடம் படத்தைக் கொடுத்து திரையரங்குகளில் வெளியிடக் கேட்டுக் கொண்டதாம்.
அதனால், இந்தப்படத்தை ரெட்ஜெயண்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.











