விமர்சனம்

படைப்பாளன் – திரைப்பட விமர்சனம்

திரைத்துறையில் இருக்கும் உதவி இயக்குநர்கள் வாழ்வு துயரம் மிகுந்தது. அவர்களின் துயரத்தின் ஒரு பகுதியைக் காட்டியிருக்கும் படம்தான் படைப்பாளன்.

ஓர் உதவி இயக்குநர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் கதை சொல்கிறார். அந்தத் தயாரிப்பு நிறுவனம் அவருக்கு இயக்குநர் வாய்ப்பு தராமல் அவருடைய கதையை புகழ்பெற்ற இயக்குநரிடம் கொடுத்து பெரும்பொருட்செலவில் படமாக எடுக்க முயல்கிறார்கள். விசயமறிந்து கேட்கப்போன அவருக்கு என்னவாகிறது? என்பதை மனம் பதைக்கச் சொல்லியிருக்கிறது படம்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கும் தியான்பிரபு, உதவி இயக்குநர் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். அவர் போட்டிருக்கும் கோட் மட்டும் உறுத்தலாக இருக்கிறது.

நாயகிகளாக அஷ்மிதா, நிலோபர் ஆகிய இருவர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பேயைப் பார்த்துப் பயப்படுவதுதான் வேலை. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

காக்காமுட்டை விக்கி, ரமேஷ் ஆகிய இருவரும் நாயகனின் நண்பர்களாக வருகிறார்கள். வில்லன்களாக வளவன், பாடகர் வேல்முருகன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். திரைப்படத்தயாரிப்பாளராக மனோபாலா நடித்திருக்கிறார். எல்லோருமே அவரவர் வேலையை அளவாகச் செய்திருக்கிறார்கள்.

வேல்முருகன் ஒளிப்பதிவில் பேய்ப்படங்களுக்குரிய எல்லா அம்சங்களும் நிறைந்திருக்கின்றன. வில்லனை அழிக்கும் காட்சி நன்று.

பாலமுரளியின் இசையும் பொருத்தம்.

படத்தில் ஒரு திரைப்படத் தயாரிப்பாளரிடம் கதை சொல்கிறார் நாயகன். அவை காட்சிகளாக விரிகின்றன. அதில் சமுதாய சேவைக்காகத் தம்மை அர்ப்பணிக்கும் கிறித்துவத்துறவிகளை உயிரோடு எரிக்கும் மதவாதக் கும்பலை அம்பலப்படுத்துகிறார்.

கதை சொல்லி முடித்தபின்பு நிஜத்தில் உதவி இயக்குநர்களின் பிரதிநிதியாக மாறி விஸ்வரூபம் எடுத்து பன்னாட்டு நிறுவனங்களை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

படம் பார்க்கும்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் சிக்கல்கள் நிழலாடுகின்றன.

படைப்பாளனுக்கு எண்ட் கிடையாது என ஓங்கி உரைத்திருக்கிறார்கள். திருடுபவர்கள் திருந்தினால் நல்லது.

Related Posts