விமர்சனம்

ரயில் – திரைப்பட விமர்சனம்

கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழ்நாட்டிற்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல இலட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழ்நாட்டின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிடச் சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழ்நாட்டில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழ்நாடு மெல்ல மெல்ல மாறிவருகிறது.

இவ்வாறு அரசியல் களத்தில் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், இச்சிக்கலை மாந்தநேயப் பார்வையில் பார்த்திருக்கும் படம் ரயில்.

தமிழ்நாட்டுக்கு வேலைதேடி வந்த இளைஞர், சரியாக வேலை செய்து பணம் சம்பாதிக்கிறார்.திடுமென அவர் இறந்து போகிறார்.அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? அவர் சேர்த்து வைத்த பணம் என்னவானது? என்கிற கேள்விகளுக்கான விடைதாம் படம்.

நாயகனாக நடித்திருக்கும் குங்குமராஜ், மதுப்பழக்கத்துக்கு ஆட்பட்டவர்,தன் குற்றத்தை மறக்கப் பிறர் மீது வன்மம் கொள்பவர்,குழந்தைகள் மீதான பாசம், நேசத்தை எதிர்பார்க்கும் மனம் ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் மனைவியாக நடித்திருக்கும் வைரமாலா.தமிழ்ப் பெண்களுக்கும்,வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டுப் பெருமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறார். நன்றாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கு வலுச்சேர்த்திருக்கிறார்.

வட இந்தியர் வேடத்தில் நடித்திருக்கும் பர்வேஸ் மெஹ்ரு,அவர் வட இந்தியர் என்பதை மறந்து சகமனிதர் என்று பார்க்க வைக்கிறார்.

நாயகனின் நண்பராக வரும் ரமேஷ்வைத்யா கவனிக்க வைக்கிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் செந்தில்கோச்சடை, வட இந்தியரின் அப்பா அம்மாவாக வரும் பிண்ட்டு,வந்தனா ஆகியோரும் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.

எஸ்.ஜே.ஜனனியின் இசையில் பாடல்கள் கேட்கலாம்,பின்னணி இசையும் தாழ்வில்லை.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் தேனி வட்டாரம் உள்ளது உள்ளபடி பதிவாகியிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் பாஸ்கர் சக்தி.தமிழீழ நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றம் போல் தமிழ்நாடு நிலப்பரப்பில் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அந்நியக் குடியேற்றம் எனும் ஒரு பெரிய அரசியல் சிக்கலைக் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டுத் தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையாகி வேலை செய்வதில்லை வடமாநிலத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியத்துக்குக் கடினமாக உழைக்கிறார்கள் என்கிற ஒற்றைப் பார்வை கொண்டு இக்கதையை எழுதியிருக்கிறார் என்பது குறை.

எடுத்துக் கொண்ட கதையை திரைமொழியில் நேர்த்தியாகச் சொல்லி,எழுதும் எனக்கு எடுக்கவும் வரும் நிறுவியிருக்கிறார்.

– இளையவன்

Related Posts