சினிமா செய்திகள்

நான் செய்தது தவறு – விஜய்சேதுபதி பட இயக்குநர் ஒப்புதல்

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இசக்கிதுரை என்பவர் தயாரித்துள்ளார்.

இந்தப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது.

இதுதொடர்பாக படத்தின் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் சில தினங்களுக்கு முன்பு தன்னுடைய வேதனையைப் பதிவிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று (மார்ச் 11) அவர் வெளீயிட்டுள்ள இன்னொரு பதிவு…..

அன்பார்ந்த நண்பர்களுக்கு,
முந்தைய பதிவில் யாதும்ஊரேயாவரும்கேளிர் டீசர் வெளியானதைத் தொடர்ந்து என் மனவருத்தத்தையும், தயாரிப்புத் தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன்.

அதைத் தொடர்ந்து…..

நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் முகநூல் பக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரம்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் முகநூல் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டியது.

அதன் பின் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் முகநூல் பக்கம் மீட்கப்பட்டது.

ஆனால் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் லாபம் ட்ரைலர் தான் எனது கடைசி அக்டிவிட்டியாக முகநூல் காட்டியது.

என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாது தான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்லத் தயாராகயில்லை. அமைதியாக இருந்தேன்.

நேற்று, இந்தப்படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த ப்ராஜக்டின் முக்கிய காரணியாக இருக்கும் குமார் சார் போனில் பேசினார்.

சில அறிவுரைகள்… சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்… அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது.

சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு அலுவலகம் செல்லப்போகிறேன்.

நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம் தான் ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன்.

நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின் போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னைச் சேர்த்துவிட்ட போதும் அதைத் தொடராமல் விட்டதால் நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை.

அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை திரைத்துறை முன்னால் ஒப்புக்கொள்கிறேன்.

என் படத்து டீசரை என் முகநூல் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது…
இன்று நிலைமை மாறி இருக்கிறது.

20 இலட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்கருத்துகள் என்று முன்னேறிப்போய்க் கொண்டிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசரை எனது முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறேன்.

தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது.

நன்றி

வெங்கட கிருஷ்ண ரோகாந்த்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Posts