சினிமா செய்திகள்

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் கவலைக்கிடம் – திரையுலகம் கண்ணீர்

2003 ஆம் ஆண்டு வெளியான இயற்கை படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன்.பதினெட்டு ஆண்டுகளில் இயற்கை, ஈ, பேராண்மை, புறம்போக்கு எனும் பொதுவுடைமை ஆகிய நான்கே படங்களை இயக்கிய்வர்.இப்போது விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படத்தொகுப்புப் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தீவிரமாகப் பணிபுரிந்து வந்தார். நேற்று (மார்ச் 11) மதியம் படத்தொகுப்புப் பணிகளிலிருந்து வீட்டிற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். மீண்டும் படத்தொகுப்புப் பணிக்கு நீண்ட நேரமாகத் திரும்பாத காரணத்தால் அவருடைய உதவியாளர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி மயங்கிக் கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதித்து வருகிறார்கள். அவருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

பதினெட்டாண்டுகளில் நான்கு படங்களே இயக்கியிருந்தாலும் தமிழ்த்திரையுல்கில் முக்கிய இயக்குநராகப் போற்றப்படுவர்,தம் படங்களில் எளிய மக்களுக்கும் புரியும்படி முற்போக்குக் கருத்துகளைக் கூறியவர்,தம்மோடு பணியாற்றிய அனைவருக்கும் உத்விகரமாக இருந்தவர் என்கிற பல நல்ல அம்சங்களைக் கொண்ட அவர் குணமடைந்து திரும்பவேண்டி திரையுலகினர் கண்ணீருடன் வேண்டுதல் செய்கின்றனர்.

Related Posts