விமர்சனம்

டெடி – திரைப்பட விமர்சனம்

இயல்பான மனித சக்தியைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்தவராக இருக்கிறார் ஆர்யா. அதாவது மூன்று வருடங்கள் படிக்க வேண்டிய படிப்பை அதன் தன்மை மாறாமல் தரம் குறையாமல் இரண்டே மாதங்களில் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்.

அப்படிப்பட்டவர் வாழ்க்கையில் ஒரு கரடிபொம்மை வருகிறது. வரும்போதே ஒரு பெரும் சிக்கலோடு வருகிறது. அதைச் சரிசெய்யக் களமிறங்குகிறார் ஆர்யா. 

கரடிபொம்மைக்கு என்ன சிக்கல்? அது எப்படிப் பேசுகிறது? ஆர்யா என்னவெல்லாம் செய்கிறார்? என்பதைச் சொல்லியிருக்கும் படம்தான் டெடி.

அதீத ஆற்றல் கொண்டவர் வேடத்துக்காக தன் வழக்கமான சுட்டித்தனங்களை விட்டு அடக்கி வாசித்து வேடத்துக்கு முழுமையாகப் பொருந்தியிருக்கிறார் ஆர்யா. சண்டைக்காட்சிகளில் தேர்ந்திருக்கிறார்.அவரை வைத்து முழுமையான ஆக்‌ஷன் படம் எடுக்கலாம்.

நாயகியாக ஆர்யாவின் நிஜ மனைவி சாயிஷாவே நடித்திருக்கிறார். அவருக்குப் பெரிதாக வேலை இல்லை. கணவன் மனைவி இருவரையும் காதலர்களாக நடிக்க வைத்து ஒரு காதல்பாடல் கூட வைக்காத இயக்குநர் சக்திசவுந்தரராஜனுக்கு இளைஞர்கள் சார்பில் கண்டனம்.   

முற்பாதியில் சதீஷ், பிற்பாதியில் கருணாகரன் ஆகியோர் ஆர்யாவுடன் வந்து சிரிக்க வைக்கிறார்கள்.

சாக்‌ஷிஅகர்வால், மசூம்சங்கர் ஆகியோர் சில காட்சிகளில் வருகின்றனர். இவர்களில் மசூம்சங்கரின் திடீர் முடிவு திடுக்கிடவைக்கிறது.

வில்லனாக நடித்திருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. அவருடைய குரலின் கம்பீரம் வேடத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறது.

teddy

teddy

இவர்கள் எல்லோரையும் விட கரடிபொம்மை வரும் காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன. ஈ.பி.கோகுலன் என்பவரின் குரல் சரியாகப் பொருந்தியிருக்கிறது.

எஸ்.யுவாவின் ஒளிப்பதிவு நன்று. அஜர்பைஜான் நாட்டின் அழகைத் தேடித்தேடி காட்டியிருக்கிறார். பொம்மை வரும் காட்சிகள் மிக அழகாக அமைய ஒளிப்பதிவாளர் முக்கிய காரணம்.

இமானின் இசையில் பாடல்கள் சுகம். இறுதியில் வரும் மறந்தாயே உருகவைக்கிறது. பின்னணி இசை பலம்.

ஒரு புதிய வகை ஆற்றல் கொண்ட நாயகன் வேடத்தை வடிவமைத்து உலக அளவில் நடக்கும் கொடிய நிகழ்வோடு அவரை இணைத்து சுவாரசியமான திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் சக்திசவுந்தரராஜன்.  

பெரியவர்களுக்குப் பிடிக்கும் குழந்தைகளைப் பெரிதும் ஈர்க்கும் டெடி, திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் கொண்டாட்டமாக இருந்திருக்கும். 

Related Posts