விமர்சனம்

படவா – திரைப்பட விமர்சனம்

படவா என்கிற பெயரைப் பார்த்ததுமே பொறுப்பற்ற இளைஞர்களைப் பற்றிய படமென்று எண்ணத் தோன்றும்.ஆனால், இந்தப்பெயரை வைத்துக் கொண்டு இயற்கையைப் பாதுகாப்பது விவசாயத்தை மேம்படுத்துவது போன்ற உயரிய விசயங்களைப் பேசியிருக்கிறார்கள்.

வேலை வெட்டியின்றி சின்னச் சின்னத் திருட்டுகள் செய்து கொண்டு சுற்றிருக்கும் நாயகன் விமல்,ஊர்த்தலைவராகி அரசாங்கத்தின் ஒட்டுமொத்தப் பாராட்டைப் பெறுமளவுக்கு உயர்கிறார்.எப்படி? என்பதைச் சொல்லியிருப்பதுதான் இந்தப்படம்.

பொறுப்பற்ற திருட்டு இளைஞன் வேடம் விமலுக்குப் புதிதல்ல.அதனால் மிக அநாயசமாக அந்த வேடத்தைச் செய்துவிடுகிறார்.அதற்குச் சற்றும் குறைவின்றி பொறுப்பான ஊர்த்தலைவராகவும் மிளிர்ந்திருக்கிறார்.காதலியுடனான காட்சிகளிலும் வேறுபாடு காட்டியிருக்கிறார்.

விமலின் நண்பராக நடித்திருக்கும் சூரி, படம் நெடுக சிரிக்க வைக்கிறார்.இவர் இந்த இடத்தை விட்டுவிட்டுப் போனது அவருக்கு எப்படியோ? இரசிகர்களுக்கு ஏமாற்றம்.

நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஷ்ரிதாராவ் அளவான அழகு.நடிப்பும் கைகூடியிருக்கிறது.வழக்கமான நாயகிகள் போன்ற கதாபாத்திரம் என்றாலும் அதில் தனித்துத் தெரிகிறார் என்பது அவருடைய பலம்.

தேவதர்ஷினி,நமோ நாராயணன் ஆகியோரின் வேடங்களும் அவர்களுடைய நடிப்பும் விமலுக்கும் படத்துக்கும் பலமாக அமைந்திருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் கேஜிஎஃப் ராம், வேடத்தின் கனத்துக்கேற்ப இருக்கிறார்.அவர் அந்த வேடத்தில் நடித்திருப்பதால் கதாபாத்திரத்தின் நம்பகத் தன்மை கூடியிருக்கிறது.

ஜானிபீட்டர் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது.பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார்.மையக் கதைக்கேற்ற ஒளியமைப்பு படத்துக்கேற்ப இருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கிறார் கே.வி.நந்தா.கே.பாலசந்தர் கமல் கூட்டணியில் உருவான உன்னால் முடியும் தம்பி படத்தை நினைவு படுத்தும் படைப்பாக உருவாக்க முயன்றிருக்கிறார்.நல்ல கருத்து, பொருத்தமான நடிகர்கள் இருந்தும் அதைத் திரைமொழியில் மொழிபெயர்ப்பதில் ஏதோ குறையிருக்கிறது.

வெள்ளைக்காரர்கள் காலத்தில் திட்டமிட்டு நம் நாட்டில் பரப்பப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் அதன் பாதிப்புகள் ஆகியனவற்றைப் பற்றிச் சுட்டியதோடு அதைக் கடந்து வருவதற்கான வழிமுறைகளையும் சொல்லியிருப்பது சிறப்பு.

– இளையவன்

Related Posts