பைசன் காளமாடன் முதல்பார்வையால் பதறும் இன்னொரு படக்குழு – விவரம்

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதியபடம் பைசன் காளமாடன். இப்படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், லால், பசுபதி, கலையரசன், ரஜிஷா விஜயன், ஹரி கிருஷ்ணன், அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, ஒளிப்பதிவாளராக எழில் அரசு ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருநெல்வேலி பகுதிகளில் படமாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சென்னையில் கபடி போட்டி நடைபெறுவது போன்று அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தார்கள். ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுற்றதாக படக்குழு அண்மையில் அறிவித்தது.
இயக்குநர் மாரிசெல்வராஜின் பிறந்தநாளையொட்டி மார்ச் 7 ஆம் தேதியன்று பைசன் காளமாடன் படத்தின் முதல்பார்வையை வெளியிட்டனர்.
பின்னணியில் காளை மாடு ஒன்று ஆக்ரோசமான பார்வையுடன் இருக்க அதற்கு முன்னால் துருவ் விக்ரம் நிற்கிறார் அதற்கும் முன்னால் ஓடுவதற்குத் தயாராக அவர் இருப்பதுபோன்ற காட்சியும் இடம் பெற்றிருக்கிறது.
அதோடு,
நான் எங்கிருந்து வருகிறேன் என்று உனக்கு தெரியும்.ஏன் வருகிறேன் என்றும் உனக்குத் தெரியும்.
வந்து சேர்ந்தால் என்ன செய்வேனென்றும் உனக்குத் தெரியும்.
ஆதலால் ….
நீ கதவுகளை அடைக்கிறாய் நான் முட்டிமோதி மூர்க்கமாய் உடைக்கிறேன்.
—
பைசன் (காளமாடன்)
என்று இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டிருக்கிறார்.
இதிலிருந்து இப்படத்தின் கதை, ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வரும் விளையாட்டு வீரன் பற்றிய கதை என்பது புலனாகிறது.
இப்படத்தின் முதல்பார்வை வெளியானதும் துருவ்விக்ரம் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.
அதேவேளையில் இந்தப் படத்தின் முதல்பார்வை வெளியானதும் இன்னொரு படக்குழு பெரும் பதட்டத்தில் இருக்கிறதாம்.
திரையுலக வட்டாரத்தில் உலவுகிறது அந்தத் தகவல்.
அந்தத் தகவல் என்ன தெரியுமா?

angeekaaram
இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஜேபி என்பவர் இப்போது ஒரு படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் தயாரிப்பாளர் கேஜேஆர். கேஜேஆர் ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் இருக்கும் நிலையில் ஸ்வஸ்திக் விஷன்ஸ் எனும் புதிய திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி அதன் மூலம் இப்படத்தைத் தயாரித்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.
அங்கீகாரம் எனப் பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் கதையும், ஒடுக்கப்பட்ட இனத்திலிருந்து வரும் இளைஞன் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.ஆனால் அவருடைய பிறப்பு காரணமாக அவருக்கான அங்கீகாரம் மறுக்கப்படுகிறது.அதற்கு எதிராக அவர் போராடுகிறார் என்பதுதான் அந்தப்படமாம்.
பைசன் காளமாடன் படத்தின் முதல்பார்வையும் மாரிசெல்வராஜின் பதிவும் வெளிப்படுத்துவதும் அங்கீகாரம் கோருபவையாகவே இருக்கின்றன.
இவ்விரண்டு படங்களிலுமே இயக்குநர் பா.இரஞ்சித் சம்பந்தப்பட்டிருக்கிறார்.ஒன்றில் தயாரிப்பாளர்களில் ஒருவராக இன்னொன்றில் இயக்குநரின் குருவாக.
இவ்விரு படங்களின் கதைக்கரு ஒன்றாக இருக்கும்பட்சத்தில் மாரி செல்வராஜ் படம்தான் உருவாக்கத்திலும் வெளிப்படுத்துதலிலும் முன்னணியில் நிற்கும் என்பதுதான் எதார்த்தம்.இதனால்தான் அங்கீகாரம் படக்குழு பெரும் பதட்டத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.