மெஸன்ஜர் – திரைப்பட விமர்சனம்
தமிழ்த் திரைப்படங்களில் பல்வேறு விதமான காதல்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.அவற்றிலிருந்து மாறுபட்டு ஒரு காதலைச் சொல்ல முயன்றிருக்கிறார் மெஸன்ஜர் படத்தின் இயக்குநர் ரமேஷ் இளங்கமணி.
நாயகன் ஸ்ரீராம் கார்த்திக் மனம் வெறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்.அந்தநேரத்தில் அவருடைய முகநூல் அரட்டை பகுதியில் தொடர்ந்து அவருக்கு குறுஞ்செய்தி வருகிறது.அதில், தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று இருக்கிறது.அதிர்ச்சியடையும் நாயகன், செய்தி அனுப்பியவரைத் தேடுகிறார்.அது ஒரு பெண்.அவர் இறந்து இரண்டு மாதங்களாகின்றன என்கிற பேரரதிர்ச்சித் தகவல் அவருக்குக் கிடைக்கிறது.
இறந்தவர் எப்படி செய்தி அனுப்பமுடியும்? என்று தேடிப்போனால் மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள் கிடைக்கின்றன.அவை என்னென்ன? அதன்பின் என்னவெல்லாம் நடந்தன என்பதைச் சொல்லியிருக்கிறார்கள்.
நிஜமாகவே வித்தியாசமான வேடம் அமைந்திருக்கிறது நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்குக்கு.அதை முழுமையாக உணர்ந்து மிகச் சரியாக நடித்து வரவேற்புப் பெறுகிறார்.காதல் காட்சிகள் கூடுதல் பலம்.
நாயகியாக மனிஷாஸ்ரீ நடித்திருக்கிறார்.காதலனுடன் நெருக்கம் காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.
இன்னொரு நாயகியாக நடித்திருக்கும் பாத்திமா, கிராமத்து இளம்பெண்களைப் பிரதியெடுத்தது போல் இருக்கிறார்.
தோழியாக நடித்திருக்கும் வைசாலி ரவிச்சந்திரன் கவனம் ஈர்த்திருக்கிறார்.ஜீவா ரவி,லிவிங்ஸ்டன்,பிரியதர்ஷினி ஆகியோர் தங்கள் வேலைகளை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
பால்கணேசன்.ஆர் ஒளிப்பதிவில் காட்சிகளில் தெளிவு.கிராமத்து அழகுகளை அப்படியே படம் பிடித்து மகிழ வைத்திருக்கிறார்.
அபுபக்கர்.எம் இசையில் பாடல்கள் கேட்கலாம்.பின்னணி இசை கதைக்களத்திற்கு மிகவும் இசைந்திருக்கிறது.
இதுபோன்ற திகில் கதைகளுக்கு படத்தொகுப்பு மிகவும் கூர்மையாக இருந்தாக வேண்டும்,இல்லையெனில் சொதப்பலாகிவிடும்.அதை உணர்ந்து உழைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசாந்த்.ஆர்.
எழுதி இயக்கியிருக்கும் ரமேஷ் இளங்கமணி, திகில் கதைக்குள் ஓர் அழகான காதலைச் சொல்ல முனைந்திருக்கிறார்.கற்பனைக்கு எல்லையில்லை என்று உரத்துச் சொல்லும் வண்ணம், இந்தப்படத்தில் வருகிற அந்தக் காதல் இதுவரை பார்க்காத மாதிரியான மாறுபட்ட காதல் என்பதால் படம் சுவாரசியமாகப் போகிறது.
– இளையவன்.










