செல்ஃபி – திரைப்பட விமர்சனம்
கல்லூரி மாணவர்களை மையமாகக் கொண்டு எவ்வளவோ படங்கள் வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு விசயத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உருவாகியிருக்கிறது செல்ஃபி.
நடுத்தர மக்கள் எப்பாடுபட்டேனும் தங்கள் மகனை மருத்துவராக்கிவிடவேண்டும் பொறியாளராக்கிவிடவேண்டும் என நினைப்பார்கள்.அப்படிப்பட்ட ஒரு குடும்பத்திலிருந்து வரும் நாயகன் ஜீ.வி.பிரகாஷ், பெற்றோரிடமிருந்து பணம் பெறாமல் பகுதிநேரத் தொழில்செய்து கல்விச்செலவைச் சமாளிக்க நினைக்கிறார். கல்லூரிக்குள்ளேயே அவர் செய்யும் அந்தத் தொழில் என்ன? அதனால் எவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றன? என்பதுதான் படம்.
ஜி.வி.பிரகாஷ் நடிப்பு நன்றாக மெருகேறியிருக்கிறது. எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம். சிறப்பாகச் செய்திருக்கிறார். முரட்டு மாணவனின் காதல்கூட வித்தியாசமாக இருக்கும் என்பதைக் காட்டியிருக்கிறார். என்னைக் கேட்டா காலேஜ்ல சேர்த்தீங்க? என்று அப்பா வாகைசந்திரசேகரிடம் பொங்கும் காட்சி நன்று.பெரும்பாலான பெற்றோருக்குப் பாடம்.
படத்தில் இன்னொரு நாயகன் போல் வருகிறார் இயக்குநர் கெளதம்மேனன். அவருடைய பாத்திரம் இதுவரை நாம் அறிந்திராத பல செய்திகளைச் சொல்லும் கதாபாத்திரம். அதற்கு முழுத் தகுதியானவராக இருக்கிறார். செய்வது தவறான தொழில் என்றாலும் அதைத் திமிரோடு செய்து கவனத்தை ஈர்க்கிறார்.
நாயகியாக வர்ஷாபொல்லம்மா. அழகாக இருக்கிறார். தவறான பாதையில் சென்றுவிட்ட காதலனை மீட்கப் போராடும் காட்சிகளில் நன்றாக நடிக்கவும் தெரியும் என்பதைக் காட்டியிருக்கிறார்.
ஜீவி.பிரகாஷின் நண்பராக நடித்திருக்கும் குணாநிதி பாத்திரம் தவறான பாதையில் பயணிக்க நினைக்கும் மாணவர்களுக்குச் சரியான எச்சரிக்கை.
நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் மட்டும் நடித்துக் கொண்டிருந்த தங்கதுரைக்கு இப்படத்தில் குணச்சித்திர நடிகராகப் பதவி உயர்வு. அதைப் பொறுப்பாகச் செய்திருக்கிறார்.
ஜீ.வி.பிரகாஷின் அப்பாவாக நடித்திருக்கும் வாகைசந்திரசேகர் நடிப்பு அருமை. மகனைப் பெரிதாகப் படிக்க வைக்கும் எண்ணம் அதனால் ஏற்பட்ட விளைவுகளை அறிந்து என்னை மன்னிச்சுடுப்பா என்று கலங்கிக் கண்ணீர்விடும் காட்சி பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது.
சங்கிலிமுருகன் வேடம் பல கல்வித்தந்தைகளை நினைவுபடுத்தும் வேடம்.அவருடைய அனுபவ நடிப்பு அந்தப்பாத்திரத்துக்குக் கூடுதல்பலம். அவருடைய மருமகனாக வரும் சாம்பால் வேடமும் பல புகழ்பெற்ற குடும்பங்களை நினைவு படுத்துகிறது.
படத்துக்கு இசையமைத்திருப்பதும் ஜீ.வி.பிரகாஷ்தான். பாடல்கள் கேட்கும் இரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் தெரிகிறது.
விஷ்ணுரங்கசாமியின் ஒளிப்பதிவில் சிரத்தை தெரிகிறது. ஒரு சின்னக் கழிவறைக்குள் நடக்கும் சண்டைக்காட்சியைக் கூட இரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
முதல்படத்திலேயே யாரும் தொடாத ஒரு விசயத்தைக் கையிலெடுத்து அதைச் சரியாகக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன்.இப்படம் பார்த்தபின்பு கல்லூரிப் படிப்பு குறித்த பெற்றோர் எண்ணம் மற்றும் மாணவர்கள் பார்வை ஆகியன மாறுவது உறுதி.











