சினிமா செய்திகள்

தனுஷ் கொடுத்த மரியாதை மகிழ்வில் திளைக்கும் ஆர்.பி.செளத்ரி

நேற்று நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி மற்றும் தயாரிப்பாளர் அம்பேத்குமார் ஆகியோர் சந்திப்பு நடந்திருக்கிறது.

எதற்காக இந்தத் திடீர் சந்திப்பு? என்ன நடந்தது?

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி, தயாரிப்பாளர் அம்பேத்குமார் மூலம் ஒரு கதை கேட்டிருக்கிறார். அக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாம். இந்தக்கதையில் தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

உடனே, தனுஷின் மேலாளரைத் தொடர்புகொண்டு, தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி தனுஷைச் சந்திக்க விரும்புகிறார். தனுஷ் எப்போது ஓய்வாக இருக்கிறார் என்று சொல்லுங்கள் செளத்ரி சார் வந்து பார்ப்பார் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இவ்விசயத்தை தனுஷிடம் அவருடைய மேலாளர் சொல்லியிருக்கிறார்.

அதைக்கேட்டதும் பதறிய தனுஷ், அவரே தயாரிப்பாளர் செளத்ரியைத் தொடர்பு கொண்டு, உங்கள் படங்களைப் பார்த்துத்தான் நான் வளர்ந்தேன். நீங்கள் வந்து என்னைப் பார்ப்பது முறையல்ல, நான் வந்து உங்களைப் பார்க்கிறேன் எப்போது ஓய்வாக இருப்பீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

நெகிழ்ந்து போன ஆர்.பி.செளத்ரி நவம்பர் 21 அன்று சந்திக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். சரி அன்றைக்கு மதியம் 12 மணி வாக்கில் உங்கள் அலுவலகத்துக்கு வந்துவிடுகிறேன் என்று சொன்னாராம் தனுஷ்.

சொன்னபடி நேற்று மதியம் சூப்பர்குட் ஃபிலிம்ஸ் அலுவலகத்துக்குச் சென்றுவிட்டாராம் தனுஷ்.

தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரியும் தயாரிப்பாளர் அம்பேத்குமாரும் தனுஷுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள்.

அதன்பின் தனுஷுடன் தனியாகப் பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

சூப்பர்குட் ஃபிலிம்ஸ் படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு விரைவில் வரலாம் என்கிறார்கள்.

படத்தில் நடிக்கிறாரோ இல்லையோ? பார்க்கவிரும்பும் தகவல் தெரிந்ததும் நீங்கள் வருவது மரியாதை இல்லை நானே வந்து உங்களைப் பார்க்கிறேன் என்று சொல்லி தனுஷ் வந்து பார்த்ததில் மிகவும் மகிழ்ந்திருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.

Related Posts