September 4, 2026
சினிமா செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தில் பங்காற்றிய ஈழத்தமிழர் மன்னிப்பு கோரினார்

ஜூன் 18 ஆம் தேதி இணையத்தில் வெளியானது ஜெகமே தந்திரம் படம். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருக்கும் படம். இந்தப்படத்திலும் ஈழத்தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் வண்ணம் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன என்று சொல்லி அப்படக் குழுவினருக்குக் கடும் கண்டனங்கள் குவிந்தன.

ஜெகமே தந்திரம் திரைப்படத்தில் திரைக்கதை உதவி செய்திருப்பவர் சோமீதரன் எனும் ஈழத்தமிழர்.அவர் மட்டுமின்றி பிரசன் ஜோ எனும் இன்னொரு ஈழத்தமிழரும் படத்தில் பணியாற்றியிருந்தார்.

இவர்களுக்கும் பல தரப்பிலிருந்தும் எதிரிப்புகள் வந்திருக்கின்றன.

இந்நிலையில், சோமீதரனிடம்,

ஜகமே தந்திரம் படத்தில் ஈழத்தமிழர்களைக் கொச்சைப்படுத்தியிருப்பதாக விமர்சனங்கள் வருகின்றன. அதன் திரைக்கதையில் ஈழத்தமிழரான உங்கள் பங்கும் இருக்கிறது. எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து என்ன? என்பதைக் கூறுங்கள் எனக் கேட்டதற்கு அவர் கூறிய பதில்….

படத்தில் பணியாற்றியிருப்பதால் நான் கருத்துச் சொல்வது சரியாகாது. படம் முக்கியமான அரசியலைப் பேசியிருக்கிறது அதனை விட்டுவிட்டு வேறு திசையில் சர்ச்சையாகிறது. ஏதிலிகளின் பாடுகளைப் பேசியிருக்கிற ஒரு பொப்புயூளர் தமிழ் படமாகத்தான் பார்க்கிறேன் என்று சொன்னார்.

இவர் இப்படிச் சொன்னாலும், படத்தில் பணியாற்றிய பிரசன் ஜோ வெளியிட்டுள்ள பதிவில்….

ஜகமே தந்திரம் திரைப்படம் வெளியானதில் இருந்து பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இத்திரைப்படத்தில் வரும் காட்சியமைப்பினாலோ அல்லது கருத்துக்களினாலோ இல்லையெனில் வசனங்களினாலோ யாருடைய மனங்களையோ இன உணர்வுகளையோ புண் படுத்தி இருந்தால் படைப்பில் பங்குபற்றியவன் என்ற முறையில் என்னுடைய மனவருந்தங்களையும் மன்னிப்பையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

Related Posts