சூர்யாவுக்கு விஜய்சேதுபதி வெளிப்படையான ஆதரவு
தனியார் திரைப்பட விருது வழங்கும் விழாவில் ஜோதிகா, கோயில்களைக் குறித்துப் பேசிய விசயம் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் பலரும் ஜோதிகாவுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த சர்ச்சை தொடர்பாக சூர்யா நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் ஒரு பகுதியில்….
அறிஞர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். “மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்’ என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம். தவறான நோக்கத்தோடு, தரக்குறைவாகச் சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம், நல்லோர்கள், நண்பர்கள், இரசிகர்கள் எங்களுக்குத் துணை நிற்கிறார்கள்.
முகமறியாத எத்தனையோ பேர் எங்கள் சார்பாக பதில் அளிக்கிறார்கள். ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன. ‘நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும்’ என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக நிற்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, சிறப்பு என்று சொல்லியிருந்தார் விஜய்சேதுபதி.
இதனால் சூர்யா ரசிகர்கள் அவருக்கு மகிழ்ச்சியும் நன்றியும் தெரிவித்து பின்னூட்டங்களை இட்டுவருகிறார்கள். அதிலேயே, இந்துகளை அவமானப்படுத்திய சூர்யாவுக்கு ஆதரவு கொடுப்பதா? என சிலர் விஜய்சேதுபதியைத் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.











