அஜீத்தின் அலட்சியப் போக்கு, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் திரைத்துறையினர் சார்பில் இன்று மவுன அறவழிப் போராட்டம் நான்கு மணி நேரம் நடைபெற்றது.
சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றது. கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, கார்த்தி, விஷால் என தமிழின் அனைத்து முன்னணி நடிகர்களும் இதில் கலந்து கொண்டனர். அஜித் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
கிட்டத்தட்ட கடந்த 7 வருடங்களாக எந்த நிகழ்ச்சியிலும் அஜித் கலந்து கொள்ளவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், அந்தச் சங்கத்தின் தேர்தலில் கூட வாக்களிக்க வரவில்லை. நடிகர் சங்கத்தின் பூமி பூஜையிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
சங்க நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதவர், மக்கள் பிரச்சினைகளுக்காக நடைபெறும் போராட்டத்தில் கூடவா கலந்து கொள்ளக்கூடாது என விமர்சனம் எழுந்துள்ளது.
நடிகர் சிம்புவும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதற்காக சும்மா இருக்காமல், தன் தரப்பை விளக்கினார். போராட்டத்துக்கும் வராமல் அதுபற்றி எவ்வித கருத்தும் சொல்லாமல் இருக்கிறார் அஜீத்.
இதனால் அவருடைய ரசிகர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரின் விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார் அஜீத்.











