September 13, 2026
சினிமா செய்திகள் நடிகர்

நடிகர் சங்கப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது ஏன்? – சிம்பு விளக்கம்

ஏப்ரல் 8 அன்று நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நான்கு மணி நேரப் போராட்டத்தில் கலந்துகொள்ளாதது குறித்து நடிகர் சிம்பு விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு, அந்தப் போராட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.பேசினால்தான் பிரச்னை தீரும். மௌனப் போராட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. திரைத்துறையில் ஆயிரம் பிரச்னை இருக்கும்போது, பிற போராட்டங்களில் பங்கேற்பதில் எனக்கு அவ்வளவாக உடன்பாடில்லை. திரைத்துறை வேலைநிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

வாக்குகளுக்காகவே அரசியல் கட்சிகள் காவிரிப் பிரச்னையைக் கையில் எடுக்கிறார்கள். காவிரி நீரைத் தமிழகத்திற்குத் தரக் கூடாது என கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிலர் மட்டுமே எதிர்க்கிறார்கள். கர்நாடகா மக்கள் அனைவரின் கருத்து அதுவல்ல. காவிரி பிரச்னையை வைத்துதான் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் அரசியல் நடக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறக் கூடாது என்று நான் கூறவில்லை. எங்களை ஐபிஎல் போட்டியின்போது எங்களை மைதானத்துக்குள் அனுமதித்துப் பாருங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஐபிஎல் களத்திற்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், சென்னை அணியின் கேப்டன், நமது தமிழ் மக்களின் மீதும், சென்னை மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கிறார்.

காவிரி விவகாரத்தில் தோனி போராட வேண்டும் என்று நான் கூறவில்லை. அதேபோல், போட்டிகளை விளையாடாமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் நான் கூறவில்லை. எங்களுக்காக ஏதாவது ஒருவகையில் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள் தோனி என்றுதான் கேட்கிறேன். கையில் கருப்பு பேட்ஜ் அணிந்தோ அல்லது வேறு ஏதேனும் ஒருவகையில் தமிழ் மக்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts