16 கோடி சம்பள பாக்கி – கடுங்கோபத்தில் தனுஷ்
தனுஷ் நடிப்பில் தயாராகியுள்ள நானே வருவேன் படம் செப்டம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.அப்படம் தொடர்பான செய்திகள் மற்றும் அப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் தனுஷ் ஈடுபட்டுள்ளார்.
அதேநேரம்,தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடுங்கோபத்தில் இருக்கிறாராம் தனுஷ். ஏன்?
தனுஷ், சம்யுக்தா மேனன்,சாய்குமார், தனிக்கெல்லா பரணி, சமுத்திரக்கனி, தொட்ட பள்ளி மது, நரா சீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு,’ நான் கடவுள் ‘ ராஜேந்திரன், ஹரிஷ் பேரடி மற்றும் பிரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் வாத்தி.
வெங்கி அட்லுரி இயக்கியுள்ள இந்தப்படத்தை,‘சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சூர்யதேவர நாக வம்சி, ‘ ஃபார்ச்சூன் 4 சினிமாஸ்’ சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படம் டிசம்பர் 2 ஆம் தேதி அன்று தெலுங்கு மற்றும் தமிழில் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் நடக்க வேண்டியிருக்கிறதாம். அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, இணைய ஒளிபரப்பு உரிமை, தமிழ்நாடு வெளியீட்டு உரிமை ஆகியன விற்பனையாகாமல் இருக்கின்றன.
இவைதான் தனுஷின் கோபத்துக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.
இதெல்லாம் தயாரிப்பாளர்கள் சம்பந்தப்பட்ட சிக்கல். இதற்காக தனுஷ் ஏன் கோபப்படவேண்டும்?
காரணம் இருக்கிறதாம்.
இந்தப் படத்துக்காக தனுஷுக்கு பேசப்பட்ட சம்பளம் சுமார் இருபத்தைந்து கோடி என்று சொல்லப்படுகிறது. இதில் சுமார் ஒன்பது கோடி மட்டும் தனுஷுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.
மீதி பதினாறு கோடியை, இந்த வியாபாரங்கள் நடந்த பின்பு கொடுப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
ஆனால் இவை எதுவும் நடப்பதற்கு முன்பே, சம்பளப் பாக்கி குறித்து எதுவும் சொல்லாமல் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருப்பதால்தான் தனுஷ் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.











