ஜெயம்ரவி சொன்னது நடந்தது – மீண்டும் அடங்கமறு கூட்டணி
2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் அடங்கமறு. ஜெயம்ரவி கதாநாயகனாக நடித்திருந்த அந்தப்படத்தை அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார்.ஜெயம்ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்திருந்தார்.
அப்படம் பெருவெற்றி பெற்றதைத் தொடர்ந்து,2019 சனவரி முதல்வாரத்தில், அந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
அதில் பேசிய ஜெயம்ரவி, தனி ஒருவன் வெற்றி பெற்றபோது பத்திரிகையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டானது. அடங்க மறு படத்தின் விமர்சனங்களைப் படித்த போது அது இன்னும் பல மடங்கு அதிகமாகியிருக்கிறது. கதை என்ன இருந்தாலும் அதைக் கொடுக்கும் விதம் மிக முக்கியம், இந்தப் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கான அனைத்துப் பாராட்டுகளும் கார்த்திக்கைத் தான் சாரும். இந்தப் படத்தின் வெற்றி மூலம் கார்த்திக் மற்றும் சுஜாதா அவர்களைச் சிவப்பு கம்பளம் விரித்து தமிழ் சினிமாவில் வரவேற்கிறோம். நான் கதையை நம்பியதை விட கார்த்திக்கை நம்பினேன். எல்லோரிடமும் பேசி மயக்கி வேலை வாங்கி விடுவார். இந்த மொத்தக் குழுவுடன் மீண்டும் இன்னொரு படத்தில் இணைய வேண்டும் என ஆசைப்படுகிறேன் என்றார்.
அவர் அன்று சொன்னது இப்போது நடைமுறைக்கு வரவுள்ளது.
ஆம்,மீண்டும் இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஜெயம்ரவி. அந்தப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவிருக்கிறார்.
ஜெயம்ரவி இப்போது நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்கள் விரைவாக நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது.
அவை முடிந்தவுடன் இந்தப்படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்குவதாக ஜெயம்ரவி கூறியிருக்கிறாராம்.
முதல்படம் வெற்றி என்றவுடனே அவசர அவசரமாக அடுத்தபடம் எடுக்காமல் மிக நிதானமாக அடுத்த படத்துக்கான திரைக்கதையை உருவாக்கிவிட்டு அதற்கடுத்த கட்டத்துக்கு வந்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் தங்கவேல்.
அடங்கமறு படத்தின் வெற்றிக்குக் காரணம் அப்படத்தின் சுவாரசியமான திரைக்கதைதான். அதை உணர்ந்து அடுத்த திரைக்கதையை உருவாக்கியுள்ளார் என்பதால் இப்படமும் நிச்சயவெற்றி என்று உற்சாகமாகச் சொல்கிறாராம் ஜெயம்ரவி.











