தெலுங்கிலும் கிடைத்த அமோகவரவேற்பு – வள்ளிமயில் படக்குழு பெரும் மகிழ்ச்சி
சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் படம் வள்ளிமயில். தெலுங்கில் புகழ்பெற்ற நடிகை ஃபரியா அப்துல்லா கதாநாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், பாரதிராஜா, புஷ்பா படப்புகழ் சுனில், தம்பி ராமையா,ரெடின் கிங்ஸ்லி, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்..ஒளிப்பதிவு – விஜய் சக்ரவர்த்தி, படத்தொகுப்பு – ஆண்டனி, கலை இயக்கம் – உதயகுமார்.
1980 களில் புகழ் பெற்று விளங்கிய நாடகமான ‘வள்ளி திருமணம்’ நாடகத்தைப் பின்புலமாகக் கொண்டு காமெடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக “வள்ளி மயில்” திரைப்படம் உருவாகிறது.
ஆதலால் காதல் செய்வீர், மாவீரன் கிட்டு, வில் அம்பு போன்ற தரமான படைப்புகளைத் தயாரித்து தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராகத் திகழும் தாய் சரவணன்,அவரது நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கிறது.
எல்லா மொழிகளிலும் வள்ளிமயில் என்கிற பெயரிலேயே படம் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் முதல்பார்வை நேற்று (ஜூன் 14,2022) மாலை வெளியானது.
விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஃபரியா அப்துல்லா ஆகியோர் இடம்பெற்ற இந்த முதல்பார்வை தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் இந்த முதல்பார்வைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதைவிட தெலுங்கில் இப்படத்தின் முதல்பார்வைக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
பிச்சைக்காரன் படம் மூலம் தெலுங்கிலும் புகழ்பெற்றிருக்கிறார் விஜய் ஆண்டனி, பாகுபலியின் கட்டப்பா உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் மூலம் சத்யராஜுக்கும் அங்கே பெரும் வரவேற்பு உண்டு. மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜதிரத்னலு படத்தின் நாயகி ஃபரியா அப்துல்லா இப்போது மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இம்மூவரும் வள்ளிமயில் முதல்பார்வையில் இடம்பெற்றுள்ளதால் அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்பாராமல் கிடைத்திருக்கும் அப்பெரும் வரவேற்பில் மகிழ்ச்சியில் திளைக்கின்றனராம் வள்ளிமயில் படக்குழுவினர்.











