இரவுக்கு ஆயிரம் கண்கள் – திரைப்பட விமர்சனம்
பொறுப்புள்ள, வாடகைக்கார் ஓட்டி வாழ்க்கை நடத்தும் நடுத்தர வர்க்க இளைஞனுக்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளும் அவற்றை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் மிக எதார்த்தமாகப் பதிவு செய்திருக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள்.
வாடகைக்கார் ஓட்டும் அமைதியான இளைஞன் பாத்திரத்துக்கு அருள்நிதி மிகவும் பொருந்திப்போகிறார்.
நிம்மதியான வாழ்க்கை, அதை மேலும் அழகாக்க அன்பான காதலி என்று மகிழ்ச்சியாகப் போய்க்கொண்டிருக்கும் அருள்நிதி தெரிந்தவர்களுக்கு உதவப்போய் கொலைப்பழியில் மாட்டிக்கொள்கிறார்..
அதிலிருந்து எப்படி மீள்கிறார்? என்பதை நூல்பிடித்தது போல் சொல்லிச்செல்கிறது படம்.
மிக நெருக்கடியான நேரத்திலும் எதார்த்தத்தில் நடக்கவே நடக்காத ஹீரோயிசத்தைக் காட்டாமல், அடிப்படை அறிவுள்ள எல்லோரும் செய்யும் செயல்களையே நாயகன் செய்வது சிறப்பு.
நாயகியாக நடித்திருக்கும் ம்கிமாநம்பியார் அமைதியான அழகு. முதல் காட்சியிலேயே ரசிகர்களைக் கவர்ந்துவிடும் முகம் அவருக்கு. அருள்நிதியுடனான காதல் உரையாடல்கள் ரசிக்கத்தக்கன.
பிடிக்காத கணவருடன் வாழும் பணக்கார வீட்டுப்பெண்ணாக சாயாசிங் நடித்திருக்கிறார். பரிதாபம் கொள்ள வேண்டிய பாத்திரம் அவருக்கு. ஆனால் அவருக்கு ஏன் இவ்வளவு ஒப்பனை என்று முகம் சுளிப்போருக்குக் கடைசியில் விடை இருக்கிறது.
துடிப்பான இளைஞனாக அஜ்மல், அவர் செய்யும் செயல்கள் பிற பெண்கள் மீது சபலம் கொள்வோருக்கு எச்சரிக்கை.
வித்யாபிரதீப், சுஜாவருணி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன் ஆகிய எல்லோருக்கும் அளவான வேடம். ஆனந்தராஜ் சிரிக்கவும் வைக்கிறார்.
திகில் படங்களுக்குரிய வகையில் அரவிந்த்சிங்கின் ஒளிப்பதிவு கச்சிதமாக இருக்கிறது..
சாம்.சி.எஸ் பின்னணி இசை உறுத்தாமல் திரைக்கதையுடன் பொருந்தியிருக்கிறது.
ஏகப்பட்ட திருப்பங்கள் கொண்ட திரைக்கதை படத்தின் வேகத்துக்குத் தடையாக இருக்கிறது. கடைசியில் எழுத்தாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லும் க்ளைமாக்ஸ் காட்சி மிகவும் நுட்பமாகக் கவனிக்கவேண்டியது.
பிற பெண்கள் மீது மோகம் கொள்ளும் நடுத்தரவயது ஆண்களுக்கு இப்படம் மூலம் சரியான பாடம் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மு.மாறன்.
நினைத்தால் பறந்து பறந்து அடிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ள அருள்நிதி, இவ்வளவு எதார்த்தமான கதையைத் தேர்ந்தெடுத்து அதற்குப் பொருத்தமாக நடித்துப் பாராட்டுப் பெறுகிறார்.











