September 21, 2026
விமர்சனம்

இரும்புத்திரை – திரைப்பட விமர்சனம்

டீமாண்டிசேஷன் என்கிற பணமதிப்பிழப்புக்குப் பின் கேஷ்லெஸ் இந்தியா என்கிற முழக்கம் பெரிதாகக் கேட்டது அல்லவா?

பணப் பரிவர்த்தனை இல்லாமல் இருந்தால் எல்லாமே கணக்கில் இருக்கும் இதனால் கறுப்புப்பணம் ஒழியும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்களே, அது எவ்வளவு ஆபத்தானது, சாமானிய மக்களை எப்படியெல்லாம் கொள்ளையடிக்கும் என்பதை எடுத்துக்காட்டும் படம்தான் இரும்புத்திரை.

இராணுவ அதிகாரி விஷால், தன் தங்கை திருமணத்துக்காக வங்கியில் கடன் வாங்குகிறார். அந்தப்பணம் காணாமல் போகிறது. அதைத்தேடிப்போகும்போது என்னவெல்லாம் நடக்கின்றன என்பது திரைக்கதை.

விஷால் இராணுவ அதிகாரிக்குரிய மிடுக்குடன் இருக்கிறார்.

மனநல ,மருத்துவராக வருகிற சமந்தாவுக்கு முதல்பாதியோடு வேலை முடிந்துவிடுகிறது. அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.

தொழில்நுட்பத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி உலகத்தையே தன் கைக்குள் அடைத்துவைக்க நினைக்கும் கதாபாத்திரத்தில் அர்ஜூன். சக்திமிக்க கதாபாத்திரம், அவருடைய ஆக்‌ஷன்கிங் இமேஜ் அதற்குப் பக்கபலமாக இருக்கிறது.

ரோபோ சங்கர் அங்கங்கே சிரிக்கவைக்கிறார். டெல்லிகணேஷுக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு நல்ல பாத்திரம்.

யுவனின் இசையில் பாடல்கள் ஓகே. பின்னணி இசை சில் இடங்களில் படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

ஜார்ஜ்வில்லியம்ஸின் ஒளிப்பதிவு திரைக்கதையை மீறாமல் இருக்கிறது.

முழுக்க ஆக்‌ஷன் கதை என்று யோசிக்காமல் குடும்பப்பாசத்தைக் கலந்து கதை சொல்லியிருப்பது படத்துக்குப் பலம்.முப்பது நாட்கள் கிராமத்திலிருக்கும் விஷாலின் வாழ்க்கை நம்மையும் அதற்கு ஏங்கவைக்கிறது.

இரண்டாம்பாதி முழுக்க டிஜிட்டல் மயமாக்கல் என்ற பெயரில் பரவியிருக்கும் தொழில்நுட்பங்களால் எவ்வளவு ஆபத்துகள் இருக்கின்றன என்கிற பாடத்தைப் போரடிக்காமல் நடத்துகிறார்கள்.

திரைக்கதையில் குறைபாடுகள் இருப்பினும், இனிமேல் நீ யாருக்கு ஓட்டுப்போடணும் என்பதைக் கூட நான் தான் தீர்மானிப்பேன் என்கிற வசனத்தின் மூலம் நாம் எதிர்கொள்ளவிருக்கும் பயங்கரத்தை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்குப் பாராட்டுகள்.

Related Posts