December 6, 2024
விமர்சனம்

பிரதர் – திரைப்பட விமர்சனம்

ஜெயம் ரவியிடம் இருக்கும் வாதிடும் திறமை பார்த்து அவரைச் சட்டம் படிக்க வைக்கிறார் அவருடைய அப்பா அச்யுத்குமார்.ஆனால்,ஜெயம் ரவியின் செயல்களால் அவரே வீட்டைவிட்டுத் துரத்துகிறார்.இதனால் ஊட்டியில் குடும்பத்துடன் வசித்துவரும் ஜெயம்ரவியின் அக்கா பூமிகா,அவரைச் சரி செய்வதாகக் கூறி ஊட்டிக்கு அழைத்துச் செல்கிறார்.ஜெயம் ரவி அங்கு போனதும் அக்கா குடும்பத்துக்குள்ளும் சிக்கல்கள். அவை என்ன? அவற்றிற்குத் தீர்வென்ன? என்பதைச் சிரிப்புடன் சொல்ல முயன்றிருக்கும் படம் பிரதர்.

பொறுப்பற்ற இளைஞன் பொறுப்பான இளைஞன் என எந்த வேடம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகச் செய்துவிடும் ஜெயம் ரவி, இந்த சட்டப் பாதுகாவலன் வேடத்தையும் சரியாகச் செய்திருக்கிறார்.விடிவி.கணேஷுடன் இணைந்து சிரிக்க வைக்கிறார்.பாசக் காட்சிகளில் கலங்க வைக்கிறார்.அவருடைய பாத்திரப்படைப்பிலேயே சில குழப்பங்க்ள் இருந்தாலும் அவர் நடிப்பில் தெளிவு இருக்கிறது.ஸ்டன்னர் சாம் சண்டைப்பயிற்சியில் சண்டைக்காட்சிகளைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

நாயகி பிரியங்காமோகன் நன்றாக இருக்கிறார்.நன்றாக நடித்துமிருக்கிறார்.சில இடங்களில் பெரிய வரவேற்புப் பெறுகிறார்.

நாயகனின் அக்காவாக நடித்திருக்கும் பூமிகா,அந்த வேடத்துக்காக அளவெடுத்துத் தைத்தது போல் இருக்கிறார்.தம்பி மீதான பாசம்,குடும்பம் மீதான அக்கறை ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்துகிறார்.அவருடைய கணவராக நடித்திருக்கும் நட்டியும் குறைவில்லை.

விடிவி,கணேஷ்,எம்.எஸ்.பாஸ்கர்,சதீஷ் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

சரண்யா பொன்வண்ணன்,ராவ் ரமேஷ்,சீதா ஆகியோரும் அளவாக நடித்திருக்கிறார்கள்.

விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவில் ஊட்டியின் பின்னணியில் அமைந்திருக்கும் காட்சிகள் இரசிக்க வைக்கின்றன.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மக்கா மிஷி பாடல் ஈர்க்கிறது.காதல் பாடலிலும் கவர்கிறார்.பின்னணி இசை கொஞ்சம் கூடுதலாகவே அமைந்துவிட்டது.

ஆஷிஷ் ஜோசப் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.படத்தைன் சுவாரஸ்யத்தைக் கூட்டத் தவறியிருக்கிறார்.கலை இயக்குநர் ஆர்.கிஷோர் உழைப்பில் அரங்குகள் நன்றாக அமைந்திருக்கின்றன.

எழுதி இயக்கியிருக்கும் எம்.ராஜேஷ்,ஆழமான அடித்தளத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதன்மேல் எழுப்பப்பட்ட கட்டிடம் பலவீனமாக இருக்கிறது.நகைச்சுவையாகவே கொண்டு செல்வதா உணர்வுப்பூர்வமாகக் கொண்டு செல்வதா என்கிற குழப்பத்திலேயே திரைக்கதை எழுதியிருக்கிறார்.அது படத்திலும் எதிரொலிக்கிறது.

– தனா

Related Posts