விமர்சனம்

களத்தில் சந்திப்போம் – திரைப்பட விமர்சனம்

ஜீவாவும் அருள்நிதியும் நெருங்கிய நண்பர்கள். இவருக்கு அவரும் அவருக்கு இவரும் திருமணத்திற்குப் பெண் பார்க்கிறேன் என்று போகிறார்கள். அதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. அவற்றை எப்படிச் சமாளித்தார்கள்? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கும் படம்தான் களத்தில் சந்திப்போம்.

வாய்ப்பேச்சில் வல்லவராக ஜீவா அதிரடி ஆளாக அருள்நிதி என்று இருவருக்கும் தனித்தனி பாதை போட்டுவிட்டார்கள். அதனால் இருவரில் அருள்நிதிக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. 

கடைசியில் அவன் அடிச்சா வேடிக்கை பார்ப்பேன் அவனை அடிச்சா வேடிக்கை பார்க்கமாட்டேன் என்று சொல்லி ஜீவாவுக்கும் ஒரு சண்டை கொடுத்து சமன் செய்திருக்கிறார்கள்.

இருவருமே தங்கள் வேடங்களுக்குச் சிறப்புச் சேர்த்து படத்துக்குப் பலமாக இருக்கிறார்கள்.

நாயகிகளாக மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். மஞ்சிமா மோகன் குண்டாக இருக்கிறார். ஒல்லியாக இருந்த பிரியா பவானி சங்கரும் இந்தப்படத்தில் எடைகூடி இருக்கிறார்.

ராதாரவி, இளவரசு, ஆடுகளம் நரேன், வேலராமமூர்த்தி,ரேணுகா உள்ளிட்டோர் நன்றாக  நடித்திருக்கிறார்கள். 

நகைச்சுவைக்காக ஜீவா அருள்நிதி ஆகியோருடனே வருகிற ரோபோ சங்கரும் பால சரவணனும் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.

யுவனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியிலும் குறைவில்லை.

அபிநந்தன் இராமானுஜத்தின் ஒளிப்பதிவில் காரைக்குடி புதிதாகத் தெரிகிறது.

நகைச்சுவை மட்டுமின்றி சமுதாய அக்கறை கலந்த நையாண்டி வசனங்களால் கவனம் ஈர்த்திருக்கிறார் வசனகர்த்தா ஆர்.அசோக்.

பெரியார் சிலை, திராவிடர் கழக மற்றும் திமுக கொடிகள் பின்னணியில் நட்பு, காதல், பாசம் நகைச்சுவை ஆகிய வியாபார அம்சங்களைச் சரிவிகிதத்தில் கலந்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் நா,ராஜசேகர். 

மையக்கதை பழசு, எல்லாமே யூகிக்கக்கூடிய காட்சிகள் ஆகியன படத்தின் பலவீனம் என்றாலும் அடிக்கடி சிரிக்க வைத்திருப்பது ஆறுதல்.

  

Related Posts