விமர்சனம்

சேத்துமான் விமர்சனம் – ஏ.ஆர்.ரகுமானுக்கொரு வேண்டுகோள்

வழக்கமான திரைப்படங்கள் மற்றும் திரைக்கதைகளுக்கு என இதுவரை சொல்லப்பட்டிருக்கும் இலக்கணங்களை உடைத்து திரைக்கலை எனும் காட்சி அனுபவத்தைப் பார்வையாளர்களுக்குப் பக்குவமாகக் கடத்தியிருக்கும் படம் சேத்துமான்.

இப்படத்தின் கதை என்ன? என்றால் ஒவ்வொரு காட்சியும் ஒரு கதைதான். அவற்றில் எதைச் சொல்ல? எதை விட்டுவிட?

தமிழ்நாட்டின் மேற்கில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தின் ஒரு சிறிய கிராமத்தை மையமாகக் கொண்டு இந்தப்படத்தை எடுத்து ஒட்டுமொத்த இந்திய ஒன்றியத்தின் சாதீய ஆணவப்போக்கைச் சந்திக்குக் கொண்டுவந்துவிட்டார் இயக்குநர் தமிழ்.

சேத்துமான் என்பது பன்றியைக் குறிப்பது. மாட்டுக்கறி உண்ணாதே என்று சொல்லும் அரசியலுக்கு எதிராகப் பேசினால் நீங்கள் பன்றிக்கறி பற்றிப் பேசுவீர்களா? என்று எதிர்க்கேள்வி வரும்.இதோ பேசுகிறோம் என்று மார்தட்டி முன்வந்திருக்கிறார்கள்.

எந்தவொரு இடத்திலும் நாங்கள் இதைப்பேசுகிறோம் என்று சொல்லிப் பேசவில்லை, பாத்திரங்கள் பேசுகின்றன ஆதிக்கப்பாறைகள் அரண்டு உருள்கின்றன.

படத்தில் தாத்தாவாக வாழ்ந்திருக்கும் மாணிக்கம்,பேரனாக வரும் சிறுவன் அஸ்வின், பண்ணாடி எனும் ஆதிக்கச்சாதிக்காரராக வரும் பிரசன்னா,  பன்றி வளர்க்கும் குமார், பண்ணாடியின் மனைவி சாவித்திரி உள்ளிட்ட எல்லாப் பாத்திரங்களும் தங்கப்பாத்திரங்கள்.

ஊருக்குத்தான் பண்ணாடி, வீட்டில் அவர் நிலைமை? பிரசன்னாவின் மனைவியாக வரும் சாவித்திரி பொளந்து கட்டுகிறார். அவர் வரும் காட்சிகளை இரசித்துச் சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது.

தமிழ்நாட்டின் வட்டார வழக்குகளில் ஒன்றான கொங்குத்தமிழ் என்றால், ஏனுங்க என்னங்க என்பது மட்டுமே என்கிற இதுவரையிலான சித்தரிப்பை அடித்து நொறுக்கி எதார்த்தத் தமிழை படமெங்கும் பரப்பியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

தாத்தாவும் பேரனும் நடந்துவரும் முதல்காட்சியில் தொடங்கி கடைசிவரை இயக்குநருக்கு இணையாகக் காட்சிகளில் கதை சொல்லிச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப்காளிராஜா. பண்ணாடி வீட்டில் இருக்கும் சிறுவர்கள் ஓட்டும் மிதிவண்டி முதல் பந்துகள் வரை அனைத்தையும் அஸ்வின் சலனமின்றிப் பார்க்கும் காட்சியின் தாக்கம் பல மணி நேரங்களுக்கு நீடிக்கிறது.

பிந்துமாலினியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்பு படத்தின் தரத்தைப் பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது.

ஒரு காட்சிக்குள்ளேயே இன்னொரு காட்சியாக நாமக்கல் மாவட்ட கிராமத்துக்கதைக்குள் இந்திய ஒன்றியத்தின் குடியரசுத்தலைவரைக் கொண்டுவந்து எல்லோர் முகத்திலும் அறைந்திருக்கிறார் இயக்குநர் தமிழ்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவன் பட நிகழ்ச்சியொன்றில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, நான் இதுவரை 3 தலைமுறைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஈரானிய இயக்குநர் மஜித் மஜித்திடம் அமர்ந்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.அப்போது, அவர் என்னிடம், நான் உங்களுடைய படங்கள் எல்லாம் பார்த்து வருகிறேன். ஏன் உங்கள் கலாச்சாரத்தை விட்டுவிட்டு, வெஸ்டர்ன் கலாச்சாரத்தையே பின்பற்றி வருகிறீர்கள் என்றார். அவருக்கு நான் இந்தப் படத்தை போட்டுக் காண்பிப்பேன். அவருக்கு இந்தப்படம் கண்டிப்பாகப் பிடிக்கும் என்றார்.

அன்புள்ள ரகுமான் ஐயா, அவருக்கு நீங்கள் அந்தப்படத்தைப் போட்டுக் காட்டினீர்களோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் இந்தப்படத்தை அவருக்குக் காட்டுங்கள் உங்களை அவர் கட்டியணைத்துக் கொள்வார்.

Related Posts