பாரிஸ் ஜெயராஜ் – திரைப்பட விமர்சனம்
வடசென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சந்தானம்.அவர் பெயர்தான் பாரிஸ் ஜெயராஜ். அவருக்கு, நாயகி அனைகா சோட்டி மீது காதல். சில பல போராட்டங்களுக்குப் பின் அவரும் சந்தானத்தைக் காதலிக்கிறார்.
இதுவரை தமிழ்த்திரைப்படங்கள் கண்டிராத ஒரு விநோத சிக்கல் அந்தக்காதலுக்கு வருகிறது. கடைசியில் என்னவாகிறது என்பதைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ்.
சென்னைத் தமிழ்ப் பேச்சு, நக்கல் நையாண்டி என சகல ஏரியாக்களிலும் கலந்து கட்டி அடித்திருக்கிறார் சந்தானம். ஒரு சண்டையும் போட்டு ஆக்ஷனும் எனக்கு வரும் என்று காட்டுகிறார்.
நாயகி அனைகா சோட்டி நிறைய ஒப்பனை செய்துகொண்டு வந்து போகிறார்.
படத்தின் பெரிய பலம் சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கும் பிருத்விராஜ்.ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நடித்து பாராட்டுப் பெறுகிறார்.
மொட்டைராஜேந்திரன், மாறன், சேது,தங்கதுரை உள்ளிட்டோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்து சிரிக்கவைக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணனின் இசையில் எல்லாப் பாடல்களும் தாளம் போட வைக்கின்றன.
ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு சிறப்பு. பல இடங்களில் அவருடைய காமிராவும் கதை சொல்லிச் செல்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் ஜான்சன் அதகளம் செய்திருக்கிறார்.முதல்பாதி மெதுவாகப் போனாலும் இரண்டாம்பாதியில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார்.
இடைவேளையில் வைத்த அதிர்ச்சியால் எந்த இடத்தில் அந்த இரகசியம் உடையும் என்கிற எதிர்பார்ப்பை எகிற வைத்துவிட்டார்.
திருமணக்காட்சியில் கோயில்களில் நடக்கும் அநியாயங்களை வெளிப்படுத்துவது திருப்புமுனைக்கு மேல் திருப்புமுனை ஏற்படுத்துவது ஆகியனவற்றால் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்திருக்கிறார்கள்.
பாரிஸ் ஜெயராஜ் பாஸ் மார்க் வாங்கி ஜெயித்தார்.











