சக்ரா வெளியீடு – தடையை உடைத்த விஷால்
புது இயக்குநர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதாஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் சக்ரா.
இப்படம் பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
விஷால் படங்கள் தமிழ்,தெலுங்கு ஆகிய இருமொழிகளில் வெளியாவது வழக்கம். இம்முறை தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் அதேநாளில் வெளியாகவிருக்கிறது.இந்தியில் இப்படத்துக்கு சக்ரா கா ரக்சக் என்று பெயரிட்டிருக்கிறார்கள்.
விஷாலே தயாரித்துள்ள இந்தப்படத்தை நிச்சயம் வெற்றிப்படமாக்க வேண்டும் என்று அவர் தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
அதனால், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இப்படத்தைப் பெரிதாக விளம்பரப்படுத்தத் திட்டமிட்டு வேலை செய்துவருகிறாராம்.
அந்த வகையில் அவர் அதிரடி முடிவெடுத்திருக்கிறார். அது என்ன?
தமிழ்த்திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவின் காரணமாக சுமார் ஆறாண்டுகளாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டில் திரைப்பட விளம்பரங்கள் வெளியாகாமல் இருந்தது.
அதை உடைத்திருக்கிறார் விஷால். பிப்ரவரி 19 வெளியாகவிருக்கும் சக்ரா படத்துக்கு அந்நாளேட்டில் விளம்பரம் கொடுத்திருக்கிறார். அந்த விளம்பரம் இன்று வெளியாகியிருக்கிறது.
இப்படத்தை இந்தியில் வெளியிடக் காரணமே இப்படத்தின் உள்ளடக்கம்தான். அரசாங்கம் டிஜிட்டல் இந்தியா என்கிற பெயரில் எல்லாவற்றையும் கணினி மயமாக்கிக் கொண்டிருக்கிறது. அதில் மக்கள் ஏமாற்றப்படுவதும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதை மையப்படுத்தியே இப்படம் உருவாகியிருக்கிறது.
ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான இந்தப்படத்தை முழுமூச்சாக அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுமென்பதற்காக தடையை உடைத்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் விளம்பரம் கொடுத்திருக்கிறாராம் விஷால்.