மீண்டும் வருகிறது மொழி – சார்ந்தோர் மகிழ்ச்சி

2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் மொழி. ராதாமோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், ஜோதிகா, சொர்ணமால்யா, வத்சலா ராஜகோபால், பிரம்மானந்தம், எம்.எசு.பாசுகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு கே.வி.குகன், இசை வித்யாசாகர். படத்தொகுப்பு மு.காசிவிசுவநாதன். பிரகாஷ் ராஜே இந்தப்படத்தைத் தயாரித்திருந்தார்.
இசையமைப்பாளர் ஒருவருக்கும் (பிரித்விராஜ்) வாய் பேசவும் கேட்கவும் இயலாத பெண்ணுக்கும் (ஜோதிகா) இடையில் மலரும் நேசத்தைச் சொன்ன படம்.
திருமணத்துக்கு முன்பு ஜோதிகா நடித்த கடைசிப்படம் இது.அவருக்குத் தேசியவிருது கொடுப்பதற்கான பரிந்துரையில் இந்தப்படம் இருந்தது.
இந்தப்படத்தில் ஜோதிகா பேசியது மௌன மொழிதான் என்றாலும் கண்களாலும் முகபாவனைகளாலும் அவர் கடத்திய உணர்வுகளை எந்த மொழியிலும் விவரிக்க இயலாது.
பிருத்விராஜ் ஜோதிகா ஆகியோருக்கிடையேயான காதல் கவிதை என்றால் பிருத்விராஜ் பிரகாஷ்ராஜ் இணை சிரிப்பு மழை.கூடவே பிரகாஷ்ராஜ் சொர்ணமால்யா காதல் காட்சிகள் இரசனை.
வாய் பேசாத கதாநாயகியைக் கொண்ட இந்தப்படத்தின் வெற்றிக்கு வசனங்கள்தாம் முக்கிய காரணம் என்பது நகைமுரண்.பெண்ணுரிமை பேசுவோரெல்லாம் முன்னுரிமை தரக்கூடிய உரையாடல்களை எழுதி இந்தப்படத்தை உயர்த்திப் பிடித்தவர் இயக்குநர் விஜி.
“வாழணும்னு ஆசை உன் கண்ணுல தெரியுது, அத ஏன் மறைக்கிற, வாழ்ந்துதான் பாரேன் நிச்சயம் தோற்க மாட்ட” என்று தன்னம்பிக்கையூட்டும் வசனங்களும்
“நீ பேச்சுலர்னு சொன்னா வீடுதான் தர மாட்டாங்க, நான் பேச்சுலர்னு சொன்னா பொண்ணே தர மாட்டாங்க”,
“வாழ்க்கையில சில விசயங்களை வெள்ளைப் பூண்டால்கூட காப்பாத்த முடியாது” இப்படிப் பல்வேறு இடங்களில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த வசனங்கள் இப்படத்தின் பெரும்பலம்.
இப்போது எதற்கு இந்தப்படத்தின் பெருமை? என்றால் காரணம் இருக்கிறது.
இப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் நவீன் தொழில்நுட்பங்களுடன் மெருகேற்றி மீண்டும் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம் ஒரு பொருத்தமான வெளியீட்டுத் தேதியில் இந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனர்.
இப்படம் வெளியான காலத்தில் இதில் பங்கு பெற்றிருந்த அனைவருக்கும் மிகுந்த நற்பெயரைப் பெற்றுக் கொடுத்த படம் என்பதால் இப்போது இப்படம் மீண்டும் வெளியாவதை அறிந்து அனைவரும் பெருமகிழ்ச்சியில் இருக்கின்றனர்.